×

கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அவதி: காலை முதல் மாலை வரை போராட்டம் தான்

சென்னை: ஆன்லைன் வகுப்புகளால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த மார்ச் 24ம் தேதிக்கு முன்பே விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால் பள்ளி தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதனால் மாணவ-மாணவிகள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் வழக்கம்போல் ஜூன் மாதம் முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை நடத்த தொடங்கி விட்டன. தற்போது, அனைத்து வீடுகளிலும் 1வது படிக்கும் குழந்தை முதல் 12வது படிக்கும் மாணவ-மாணவிகள் வரை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணி வரை ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகிறார்கள்.  இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சொல்ல முடியாத இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

பள்ளிகள் திறக்கா விட்டாலும் வழக்கம்போல் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று பள்ளிகளில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்திற்கான கட்டணம், சீருடை கட்டணம், வேன் கட்டணம், லைப்ரரி கட்டணம் என அடுக்கிக் கொண்டே செல்கின்றனர். தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் எதற்காக இந்த கட்டணம் என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள். பள்ளி நிர்வாகம் கேட்கும் கட்டணத்தை தராவிட்டால், மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று மறைமுக மிரட்டல் விடப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு கூறியுள்ளது. தற்போது பெற்றோர்கள் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்படும் சூழ்நிலையில் எப்படி பள்ளி கட்டணம் கட்ட முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில், குழந்தைகளை வேறு பள்ளியில் கொண்டு சேர்க்கவும் முடியாத நிலையில் பெற்றோர்கள் தவித்து வருகிறார்கள். அதேநேரம், வீட்டில் தொல்லை தாங்க முடியாமல் கட்டணம் கட்டி, ஆன்லைன் வகுப்பில் சேர்க்க பெற்றோர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அடுத்து, தங்கள் குழந்தைகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனிக்க கண்டிப்பாக நவீன வசதியுடன் கூடிய அன்ட்ராய்டு போன் அல்லது லேப்டாப் தேவைப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பெற்றோரும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அடுத்து போனுக்கு நெட் வசதி செய்தி கொடுக்க வேண்டும். தினசரி 4 மணி நேரம் வகுப்பை கவனிக்க 5 முதல் 10 ஜிபி செலவாகிறது. அதற்கு வசதியாக நெட் கனெக்‌ஷன் கொடுக்க வேண்டுமென்றால், அதற்காக மாதம் ரூ.1000 செலவு செய்ய வேண்டும் இப்படி பல வழிகளில் பெற்றோர்கள் சிரமப்படுகிறார்கள்.

அடுத்து மாணவர்கள் படும் கஷ்டம் என்னவென்றால், சரியாக காலை 9 மணிக்கெல்லாம் வழக்கம்போல் பள்ளிகளுக்கு செல்வது போன்று குளித்து முடித்து சீருடையுடன் போன் அல்லது லேப்டாப் கேமரா முன் உட்கார்ந்து விட வேண்டும்.
ஆசிரியர்கள் சொல்வது சரியாக புரியாவிட்டாலும், புரிந்த மாதிரி நடிக்க வேண்டியுள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் என்றால், அவர்களுடன் பெற்றோர்களும் உட்கார்ந்து ஆசிரியர் சொல்லி கொடுப்பதை கவனிக்க வேண்டியுள்ளது. அப்போது தான், மீண்டும் தங்கள் குழந்தைகளுக்கு விரிவாக சொல்லி பாடங்களை கொடுத்து புரிய வைக்க முடியும்.

இப்படி காலை 9 மணி முதல் 4 மணி வரை போனை பார்த்துக் கொண்டிருப்பதால் அவர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சமும் உள்ளது. இது சம்பந்தமாக வழக்கு கூட தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
3வதாக ஆசிரியர்களின் நிலை தான் பரிதாபமாக உள்ளது. இவர்களுக்கும், வழக்கம்போல் பள்ளிகளில் வகுப்பு நடத்தப்படுவது போன்று காலை முதல் மாலை வரை லேப்டாப் முன் உட்கார வேண்டிய நிலை உள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்களை மட்டும் பள்ளிகளுக்கு வர சொல்லி, அங்கிருந்து தனியாக நின்று பாடம் எடுத்து, அதை கேமரா மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்து தெரிந்துகொள்ள வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

பல பள்ளி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்துகிறார்கள். வழக்கமாக ஆசிரியர்கள், பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பறையில் மொத்தமாக உட்கார வைத்து பாடம் எடுத்தாலே மாணவர்கள் ஒழுங்காக பாடத்தை கவனிக்க மாட்டார்கள். இதில் வீட்டில் இருந்து, லேப்டாப் மூலம் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை அவர்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. காலையில் ஒரு ஆசிரியர் பாடம் எடுக்கும் முன் ஒரு முறையும், முடிக்கும்போது ஒரு முறையும் அனைத்து மாணவர்களும் ஆன்லைனில் உள்ளனரா என்று அட்டனன்ஸ்(வருகை பதிவு) எடுக்கிறார்கள்.

ஒவ்வொரு மாணவர் அல்லது மாணவி பெயரை சொல்லி ஆசிரியர்கள் கேட்கும் போது, கேட்காத மாதிரி சிலர் ஆசிரியரை கோபப்படுத்துகிறார்கள். மீண்டும் பெயரை சத்தமாக கூப்பிடும் போது தான் பதில் கிடைக்கிறது. கேட்டால், நெட் கனெக்‌ஷன் விட்டு விட்டு வருகிறது. அல்லது நீங்கள் பேசுவது சரியாக கேட்கவில்லை என்று ஏட்டிக்கு போட்டியாக மாணவர்கள் பேசுகிறார்கள். ஆன்லைன் வகுப்பு நடத்தும் போது, மாணவர்கள் கேமராமுன் முகம் தெரியும்படி வைத்திருக்க வேண்டும். ஆனால் பலர் அப்படி செய்வதில்லை என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கேட்டால், ஆடியோ வரவில்லை, வீடியோ வரவில்லை என்று போன் மீது குற்றச்சாட்டை தூக்கி போடுகிறார்கள். சில மாணவர்கள் அட்டனன்ஸ் கொடுத்துவிட்டு, வகுப்புகளை கவனிக்காமல் சென்றுவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுபற்றி ஆசிரியை ஒருவர் கூறும்போது, 1ம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் வரை ஓரளவு சமாளித்துவிட முடியும். ஆனால் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களை பள்ளி வகுப்பறையிலேயே சமாளிக்க முடியாது. நம் கண் முன் இல்லாமல், வீட்டிலேயே இருந்து ஆன்லைன் வகுப்பில் இருக்கும் மாணவர்களை எப்படி கட்டுப்படுத்த முடியும். இதாவது பரவாயில்லை, சில மாணவர்கள் பண்ணும் சில்மிஷம் சொல்வதற்கே கஷ்டமாக இருக்கிறது. பாடம் நடத்தி விட்டு, பசங்களா புரிந்ததா? என்று கேட்டால் நன்றாக படிக்கும் மாணவர்கள் ‘‘யெஸ் மிஸ்’’ என்று சொல்கிறார்கள்.

ஆனால், சில மாணவர்கள் ஸ் ஆ...ங்....என்று ஏதோ ஒரு மூடில் பதில் சொல்கிறார்கள். சிலர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, ஏதாவது ஒரு தவறான கமெண்ட் அடிக்கிறார்கள். அப்படி கூறியது யார் என்று ஆன்லைன் வகுப்பில் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், ஆன்லைன் வகுப்பில் ஒருநாள் பாடம் நடத்தி முடிப்பதற்குள்ளே போதும் போதும் என்றாகி விடுகிறது என்றார். முக்கியமாக கணக்கு, அறிவியல் பாடங்களை ஆன்லைனில் நடத்தினால் மாணவர்களுக்கு எளிதில் புரிவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதேநேரம், மாணவர்களும் பள்ளிக்கு வந்து படித்த மாதிரி ஆன்லைனில் படிக்க முடியவில்லை. பள்ளிக்கு வந்தால், நண்பர்களை சந்தித்து சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதற்கு இன்னும் சில மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

* நோட்ஸ் எடுக்கிறாங்களோ இல்லையோ ஆசிரியர் உயிரை நல்லா எடுக்கிறாங்க...
தற்போது நடைபெற்று வரும் ஆன்லைன் வகுப்புகள் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு கமெண்ட்கள் தினசரி வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆசிரியை ஜானகி, ஆன்லைன் வகுப்பை கிண்டல் செய்து பேசும் வீடியோ தற்போது பரபரப்பாகி வருகிறது. அது வருமாறு: ஹலோ நான் ஜானகி பேசுறேன். நான் என் பிள்ளைங்களுக்கு ஆன்லைன் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சேன். எனக்கு இப்போவே வெறுத்து போயிடுச்சு. பசங்க வகுப்பை கவனிக்கிறாங்களோ இல்லையோ அனைத்து பெற்றோர்களும் கேமரா முன் வந்து உட்கார்ந்து விடுகிறார்கள். முக்கியமாக அம்மாக்கள்... நான் எப்போ கிளாஸ் ஆரம்பிக்க வர்றனோ அப்பதான் பசங்களுக்கு சாப்பாடு ஊட்டிவிட வறாங்க. இதுகூட பரவால்லை... ஒரு அம்மா நான் கிளாஸ் ஆரம்பிக்கும்போது, அவங்க குழந்தைக்கு பல் தேய்ச்சு விட்டுக்கிட்டு இருந்தாங்க. நான் ஹோம் ஒர்க் காட்டுன்னு சொன்னா, அவங்க அம்மா குழந்தைய ஈ காட்ட சொல்றாங்க.

அம்மாக்கள் எவ்வளவோ பரவாயில்லை. இந்த அப்பாக்கள் இருக்காங்களே.. நேற்று நான் கிளாஸ் எடுக்கும்போது ஒரு குழந்தையின் அப்பா சட்டையே இல்லாம வீட்டை சுத்திகிட்டு இருந்தாரு. குட்டியா ஒரு கால்சட்டை போட்டுக்கிட்டு, கிங்கினி மங்கினின்னு நடந்துகிட்டு இருக்காரு. அத பார்த்தவுடன் எல்லா பசங்களும், கெக்கபிக்க கெக்கபிக்கன்னு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. 2 மணி நேரம் கிளாஸ். அதில் ஒரு மணி நேரம் கெக்கபிக்க, ஒருமணி நேரம் அட்டனன்ஸ், அதுக்குள்ள கிளாஸ் முடிஞ்சிடும். பிள்ளைங்க நோட்ஸ் எடுக்கிறாங்களோ இல்லையோ என் உயிரை நல்லா எடுக்கிறாங்க. ஒருத்தன் வீடியோவை ஆன் பண்ணிட்டு ஆடியோவை ஆப் பண்ணிடுறான். ஒருத்தன் ஆடியோவை ஆன் பண்ணிட்டு வீடியோவை ஆப் பண்ணிடுறான். இன்னொரு ஸ்பெஷல் விஐபி இரண்டையும் ஆப் பண்ணிடுறான். நான் கண்டிப்பா சொல்றேன், அவன் ஏதாவது பப்ஜி கிப்ஜின்னு விளையாடிகிட்டு இருப்பான். நல்லாயிருக்கே இந்த கூத்து... என்று உரையாடல் முடிகிறது.

* அரசு ஆசிரியர்கள் ஜாலி
கொரோனா ஊரடங்கால் அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த 100 நாட்களுக்கு மேலாக விடுமுறையில் ஜாலியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடந்த மாதிரி தெரியவில்லை. பாவம், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள். பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் இதுபற்றி தெளிவாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஆனாலும், எந்தவித பிடிப்பும் இல்லாமல் சம்பளம் மட்டும் கிடைத்து விடுகிறது. ஆனால், தமிழகம் முழுவதும் பல லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 3 மாதமாகசரியாக சம்பளம் வழங்கவில்லை. சில பள்ளிகள் ஒன்று, இரண்டு மாதம் பாதி சம்பளம் வழங்கியது. தற்போது ஆன்லைன் வகுப்பு நடத்த வைத்து, அதிகமான வேலை வாங்குகிறார்கள். ஆனாலும், சம்பளம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பயத்திலேயே அவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.


Tags : curfew schools ,Teachers ,parents ,Corona , Corona Curfew, Schools, Online Class, Teachers, Students, Parents, Awadhi
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...