×

தனியார் பள்ளிகளில் பெற்றோர் தாமாக முன்வந்து கல்வி கட்டணம் செலுத்த தடையில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்

சென்னை: தனியார் பள்ளிகளில், பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள், பள்ளிகள் சங்கங்களின் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கட்டணத்தை வசூலிக்காமல் எப்படி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க முடியுமென நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை  தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தனியார் பள்ளிகள், கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்ப்பந்திக்கக் கூடாது என்றுதான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களுக்கு, 248 கோடியே 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
அந்த தொகை மூலம், மூன்று  மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம். மும்பை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட சில நீதிமன்றங்கள், தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்தார். அப்போது, நீதிபதி மகாதேவன், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம்.
இந்த கோரிக்கையை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என, விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : High Court ,schools ,Parents , Private school, parents, tuition fees, restrictions, High Court, Govt
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...