×

கோவையில் 16 வயது மாணவன் மீது போலீஸ் தாக்குதல் கோவை போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

கோவை: கோவையில் பள்ளி மாணவனை தாக்கிய போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என விளக்கம் கேட்டு போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோவை ரத்தினபுரி பகுதியில் பெண் ஒருவர் தள்ளுவண்டி கடையில் டிபன் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 21ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரத்தினபுரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இன்னொரு போலீஸ்காரர் தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்த பெண்ணிடம் இங்கே கடை நடத்த கூடாது என கூறி விரட்டினர்.

அப்போது அந்த பெண் கடையை இப்போதுதான் திறந்து வைத்திருக்கிறேன். வியாபாரம் இல்லாமல் எங்களால் வாழ முடியாது எனக்கூறினார். அதற்கு போலீசார் கொரோனா நோய் பரவி வரும் நிலையில் இங்கே கடை நடத்தக்கூடாது என கூறி விரட்டினர். மேலும் அந்த பெண்ணிடம் செல்போனை பறித்தனர். அப்போது அருகே நின்று கொண்டிருந்த பெண்ணின் மகனான 16 வயதான பள்ளி மாணவன், போலீசின் பைக் சாவியை பறித்தார். எங்களை மட்டும் மிரட்டி செல்போன் பறிக்கிறீர்கள். இது நியாயமா? என கேட்டார். ஆவேசமடைந்த போலீசார் லத்தியால் அந்த மாணவரை சரமாரியாக தாக்கினர். மாணவரை போலீசார் நடுரோட்டில் லத்தியால் தாக்கியதை அந்த பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ காட்சி பேஸ்புக், வாட்ஸ் அப்களில் வைரலானது. பள்ளி மாணவரை போலீசார் தாக்கியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் கோவை போலீஸ் கமிஷனர் சுமித் சரணிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இரு வாரத்திற்குள் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணையகத்திற்கு விளக்கம் தரவேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசார் மீது துறை ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? பொது இடத்தில் மாணவனை தாக்கியது ஏன்? இது தொடர்பாக என்ன மாதிரியான விசாரணை நடத்தப்பட்டது? என மனித உரிமை ஆணையம் கேள்வி கேட்டுள்ளது. கோவையில் மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் போலீசார் மீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Coimbatore ,student ,student attack , Coimbatore, 16-year-old student, police attack, Coimbatore police commissioner, human rights commission, notice
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...