×

புழல் கன்னடபாளையம் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர் சடலத்தை எரிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 22வது வார்டுக்கு உட்பட்ட புழல் கன்னடபாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க நபர், கடந்த 23ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். இவரது சடலம், புழல் கன்னடபாளையம் சுடுகாட்டில் எரிக்கப்பட்டது. அப்போது, அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்ட ஒரு மாநகராட்சி ஊழியர், தனது கவச உடையை கழற்றி பாதுகாப்பற்ற முறையில் சாலை ஓரத்தில் வீசிவிட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சுடுகாட்டில் மின்தகன மேடை இல்லாததால், மரக்கட்டைகள் மூலம் எரிக்கப்படுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கொரோனாவால் இறந்தவர்கள் சடலத்தை இனிமேல் இங்கு எரிக்க கூடாது, என இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், புழல் சக்திவேல் நகர், 22வது தெருவை சேர்ந்த 55 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் இறந்தார். இவரது சடலத்தை கன்னடபாளையம் சுடுகாட்டில் எரிப்பதற்காக சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இதுபற்றி அறிந்த புழல் கன்னடபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சுடுகாடு முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, புழல் போலீசார் மற்றும் 22வது வார்டு மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள், ‘‘கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை இந்த சுடுகாட்டில் திறந்தவெளியில் கட்டைகள் மூலம் எரித்தால் சுற்றுப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சடலங்களை எரிக்க கூடாது. வேண்டுமானால் புதைத்துக் கொள்ளலாம்,’’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், ‘‘இனிமேல் இங்கு சடலங்களை எரிக்க மாட்டோம், புதைப்போம்,’’ என உறுதி அளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சடலம் புதைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Coroner ,protest ,Puluth Kannada Kannada ,Pulwama ,Civil Struggle Coroner , Funeral Kannada, fire, corona, dead body, anti-burn, civilian struggle
× RELATED ராணிப்பேட்டையில் கொரோனாவால்...