கர்ப்பிணி மனைவியை பார்க்க செல்வதற்கு இ-பாஸ் கிடைக்காததால் வாலிபர் தற்கொலை

சென்னை: காஞ்சிபுரம் பொய்யாகுளம் மாகாளி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லிங்கேஷ் (28). சாயப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராகிணி (26). கடந்த ஓராண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. தற்போது ராகிணி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளதால், அஸ்தினாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்தார். ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் இருந்த லிங்கேஷ், அஸ்தினாபுரத்தில்  உள்ள கர்ப்பிணி மனைவியை பார்க்க இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், மனவருத்தத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை ராகிணி, லிங்கேஷுக்கு போன் செய்துள்ளார். ஆனால், அவர் எடுக்கவில்லை. இதையடுத்து, காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் உள்ள லிங்கேஷின் சகோதரிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார். அவர், உடனடியாக லிங்கேஷ் வீட்டுக்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது லிங்கேஷ் தூக்கிட்டு சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

Related Stories:

>