×

இளைய தலைமுறையை சீரழித்த டிக் டாக் செயலிக்கு தடை: பெற்றோர் மகிழ்ச்சி

சென்னை: செல்போனில் மூழ்கி போன குடும்ப பெண்கள், இளைய தலைமுறையினரின் குற்ற செயல்களுக்கு வழிவத்த டிக் டாக் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது பெற்றோர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி தடை விதித்துள்ளது. இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களை சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.  

இந்திய சைபர் கிரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு தடை செய்வதாக அறிவித்துள்ள செயலிகளில் மிகவும் புகழ் பெற்றது டிக் டாக் செயலி தான். இதை இந்தியாவில் 50 கோடி பேர் டவுன் லோடு செய்து வைத்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 4 கோடி பேர் வரை தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்துகின்றனர். அந்த அளவுக்கு மேல்தட்டு மக்கள் முதல் பாமர மக்கள் வரை டிக் டாக் மோகத்தில் மூழ்கி கிடக்கும் அவல நிலை இருந்து வந்தது. பள்ளி மாணவர்கள் முதல் இளம் தலைமுறைகள் வரை அளவுக்கு அதிகமாக டிக் டாக் மோகத்தில் மூழ்கி கிடந்தனர். எப்படி கொரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக பரவியதோ அதை விட வேகமாக டிக் டாக் செயலி அனைவரது செல்போனிலும் இடம் பிடித்தது.

முதியவர்கள் முதல் குடும்ப பெண்கள் வரை என பலரும் டிக் டாக் செயலிக்கு அடிமையாகி வந்தனர். டிக் டாக் செயலியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கும் வந்ததை காணமுடிந்தது. வாலிபர்கள் பலரை குற்றச் செயல்களுக்கு அழைத்து சென்றது. இதேபோல், பல ஆபாச வீடியோக்களும் இதில் தாராளமாக வலம் வந்தது. விதவிதமாய் வித்தியாசமாய் பல்வேறு காட்சிகளில் இளைய தலைமுறையினர் நடித்து, அதனை சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இதற்கும் மேல் ஒருபடி தாண்டி, காவல்நிலையம் வரை சென்று டிக் டாக் செய்தவர்கள் ஏராளமானோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல சாதி மோதல்களுக்கும் தூண்டு கோலாக இந்த செயலி இருந்து வந்தது.

ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஒரு மணி நேரமாவது டிக் டாக் பார்க்கும் அளவுக்கு டிக் டாக் செயலியின் மோகம் இருந்து வந்தது. டிக் டாக் செயலியை தடை செய்ய தமிழக  சட்டமன்றத்தில் கூட எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசால் தான் இதை தடை செய்ய முடியும் என்று அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால் செல்போனில் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறைகளை எப்படி மீட்கப் போகிறோம் என்ற பதற்றம் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்தநிலையில் தற்போது மத்திய அரசு அதிரடியாக டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், உடனடியாக கூகுள், ஆப்பிள் உள்ளிட்ட பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. அது மட்டுமல்ல, ஏற்கனவே டவுன் லோடு செய்து பயன்படுத்தி வந்தவர்களின் செல்போனில் அந்த செயலியை இயக்கினால் ‘நோ நெட்ஒர்க்’ என வருகிறது. மத்திய அரசின் இந்த உடனடி நடவடிக்கை சமூக ஆர்வலர்கள் தரப்பில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறியதாவது:  
இது ஒருவகையான மன நோய். இந்த நோய்க்கு, கிராமம், நகரம், ஏழை, பணக்காரன் என்றெல்லாம் தெரியாது. சென்னையில் நூறில் நான்கு பேருக்கு இந்த நோய் இருக்கிறது. இதே நிலை தான் ஊர்களிலும் காணப்படுகிறது. தன்னை எல்லோரும் விரும்ப வேண்டும், ஆஹா ஓஹோ என சொல்ல வேண்டும், என்றெல்லாம் நினைப்பவர்கள் இதுபோன்ற செயலிகளில் மூழ்கிவிடுகின்றனர். குழந்தையை வைத்து வீடியோ எடுக்கும் போது அந்த குழந்தையும் அதையே பின்பற்றுகிறது. சாதாரண மனிதர்கள் இதில் கவனம் செலுத்த மாட்டார்கள்.

தன்னை மார்டனாக காட்ட வேண்டும் என்ற மனநிலை உள்ளவர்களிடம் டிக் டாக் போன்ற செயலி கிடைக்கும் போது அது அதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள். நிறைய வீடியோ எடுப்பது, அடிக்கடி செல்பி எடுத்து அப்லோடு செய்வது என இதற்கு அடிமையாகிறார்கள். அந்த வீடியோக்களுக்கு லைக் கிடைக்கும் போது, இன்னும் கவர்ச்சியாக நடித்தால் நிறைய லைக் வாங்கலாம் என்ற மனப்பான்மைக்கு வந்து விடுகின்றனர். இதுபோன்ற செயலிகளை தடை செய்வதால் மன நோய்களுக்கு ஆளாகாமல் அவர்களை தடுக்கலாம். இவ்வாறு கூறினர். தன்னை மார்டனாக காட்ட வேண்டும் என்ற மனநிலை உள்ளவர்களிடம் டிக் டாக் போன்ற செயலி கிடைக்கும்போது அதை மிக அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

Tags : The younger generation, the degraded, tick dog processor, is banned
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...