×

போலீசார் விடிய விடிய லத்தியால் அடித்ததால் சாத்தான்குளம் போலீஸ் நிலைய டேபிளில் ரத்தக் கறை: பெண் தலைமை காவலர் பகீர் தகவல்; ஐகோர்ட்டில் மாஜிஸ்திரேட் அறிக்கை

நெல்லை: சாத்தான்குளத்தில்  வியாபாரிகள் இறந்த சம்பவம் குறித்த விசாரணையின் போது, ஜெயராஜ், பென்னிக்சை போலீசார் விடிய, விடிய லத்தியால் அடித்துள்ளனர். இதனால், லத்தி, காவல் நிலைய டேபிளில் ரத்தக்கறை ஏற்பட்டதாக பெண் தலைமை காவலர் கூறியதாக ஐகோர்ட்டில் மாஜிஸ்திரேட் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் குறித்து விசாரணை நடத்திய கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தனது விசாரணை அறிக்கையை மதுரை ஐகோர்ட் கிளையில் நேற்று தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை நிறைவேற்ற நீதிமன்ற ஊழியர்களுடன் 28ம் தேதி பகல் சுமார் 12.45 மணிக்கு சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷன் சென்றேன். அப்போது போலீஸ் ஸ்டேஷனில் ஏடிஎஸ்பி குமார், சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் இருந்தனர். இருவரும் அலட்சியமாக, பொறுப்பற்ற தன்மையுடன், மிரட்டும் தொனியில் செயல்பட்டனர். அவர்களிடம் பொது  நாட் குறிப்பேடு, இதர பதிவேடுகளை கேட்ட போது அவற்றை சமர்ப்பிக்க முறையாக  நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர்கள் வெளியே இருக்க பணிக்கப்பட்டனர். இதையடுத்து நண்பல் 1 மணியளவில் விசாரணை துவங்கியது.

காவல் நிலைய கண்காணிப்பு கேமராவின் பதிவுகள் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. ஆனால் சிசிடிவியின் ஹார்டு டிஸ்க் தினமும் தானாகவே அழிந்து போகும் அளவிற்கு செட்டிங் செய்யப்பட்டிருந்தது. சம்பவம் நடந்த 19ம் தேதி  முதல் எந்த காணொளி பதிவுகளும் கணினியில் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. இதனால் அதன் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. காவலர் மகாராஜன் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பல்வேறு முறையான கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக கேட்ட போதும், அவர் சரிவர பதில் அளிக்க முன்வரவில்லை. பின்னர் தலைமை காவலர் ரேவதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அவர் சம்பவ இடத்தில் சாட்சியாக இருந்ததால் அவரது சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அவர் சாட்சி அளிப்பதை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருப்பார்கள் என்பதால் நீதிமன்ற ஊழியர்கள் பாதுகாப்பிற்காக வெளியே நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசார் போலீஸ் ஸ்டேஷனின் வலது பக்கம் உள்ள வேப்ப மரத்தின் கீழ் கூட்டமாக சேர்ந்து கொண்டு நீதிமன்ற ஊழியர்ககளை கிண்டல் செய்தனர். இதனால் சாட்சியம் அளித்த போலீஸ் ரேவதி மிகுந்த பதற்றம் அடைந்தார்.
கைதிகள் இருவரையும் அங்கிருந்த போலீசார் விடிய, விடிய லத்தியால் அடித்ததாகவும், அதில் லத்தி மற்றும் டேபிள் ஆகிய இடங்களில் ரத்தக் கறை படிந்துள்ளது. அதை அவர்கள் அழிக்க நேரிடும் என்றும், அவற்றை உடனே கைப்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அங்கு சூழல் சரியில்லாமல் கிளம்ப நேரும் போது சாட்சி அளித்த போலீஸ் ரேவதி கையெழுத்திட மறுத்தார். அவரிடம் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்த பின்னர் வெகுநேரம் கழித்து கையெழுத்திட்டார். அங்கு நிலைமை பாதுகாப்பாக இல்லாததாலும், போலீசார் ஆங்காங்கே சூழ்ந்து கொண்டு நடக்கும் நிகழ்வுகளை தமது செல்போனில் பதிவு செய்து கொண்டு நீதிமன்ற ஊழியர்களை மிரட்டிக் கொண்டு இருந்ததால், அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்தோம். பின்னர் அனைத்து நிகழ்வுகளையும் மாவட்ட நீதிபதிக்கு தொலைபேசி வாயிலாக தகவல் சமர்ப்பித்தேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

* லத்தியை கேட்டதால் போலீஸ் ஓட்டம்
மாஜிஸ்திரேட் தனது அறிக்கையில், லத்திகளை கைப்பற்றுவதற்காக அங்கிருந்த போலீசாரிடம் லத்திகளை கொடுக்கும் படி கூறியும் காதில் ஏதும் விழாதது போல் இருந்தனர். பின்னர் கட்டாயப்படுத்தியதால் லத்தியை ஒப்படைத்தனர். அதில் காவலர் மகாராஜன் என்னை பார்த்து ‘’உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா’’ என்று என் காதில் விழும் படி பேசி அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். முதலில் அவரது லத்தியை சொந்த ஊரில் உள்ளது என்றும், பிறகு போலீஸ் குடியிருப்பில் உள்ளது என்றும் கூறி ஒத்துழைக்க மறுத்தார். பின்னர் லத்தியே இல்லை என்றும் கூறினார். மேலும் அங்கிருந்த காவலர் ஒருவரிடம் லத்தியை கேட்ட போது அவர் அங்கிருந்து எகிறி குதித்து தப்பி ஓடி விட்டார். இவை அனைத்தையும் அங்கிருந்த காவலர்கள் வீடியோ எடுத்தனர் என கூறியுள்ளார்.

Tags : dawn Magistrate , Police, Lathi, Sathankulam Police Station, Blood stain, Female Chief Guard, Information, Icort, Magistrate report
× RELATED ஈஷா மையத்தில் பணியாற்றி காணாமல் போன 6...