×

நாட்டில் உள்ள 80 கோடி ஏழை மக்களுக்கு நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘‘நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு இந்தியர் கூட பசியோடு உறங்கச் செல்லக் கூடாது என்பதற்காக இலவச ரேஷன் பொருட்கள் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. அடுத்து வருவது சளி, காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய மழைக்காலம் என்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’’ என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த 6வது முறையாக தேசிய ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நேற்று உரையாற்றினார். அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் 2வது ஊரடங்கு தளர்வை எட்டி உள்ளோம். அதோடு, சளி, காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகளை ஏற்படுத்தும் மழைக்காலமும் வரப் போகிறது. எனவே மக்கள் தங்களை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கொரோனா உயிர் பலி விகிதம் குறைவாகவே உள்ளது. உரிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது உள்ளிட்ட பிற முடிவுகளால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. முன்பு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை 20 விநாடிகளுக்கு கழுவுதல் போன்றவற்றில் கவனமாக இருந்தோம். இன்று அவற்றை சரியாக பின்பற்றாமல் இருப்பது கவலை அளிக்கிறது. ஊரடங்கு சமயத்தில் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. இப்போது, மாநில அரசுகளும் உள்ளாட்சி அமைப்புகளும் மக்களும் அதே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட வேண்டும். ஒரு நாட்டில் பொது இடத்தில் மாஸ்க் அணியாத பிரதமருக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்ட செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். இதேபோன்ற உணர்வுடன், இந்தியாவிலும் உள்ளாட்சி நிர்வாகங்கள் செயல்பட வேண்டும். அப்போதுதான் நாம் 130 கோடி இந்தியர்களையும் காப்பாற்ற முடியும். கிராமவாசியோ, பிரதமரோ, இந்தியாவில் யார் ஒருவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை.

ஊரடங்கில் யார் ஒருவரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த நாடு முன்னுரிமை அளிக்கிறது. யார் ஒருவரும் பசியுடன் படுக்கைக்கு செல்லக் கூடாது என்பதை உறுதி செய்ய மத்திய அரசு, மாநில அரசுகள், சமூக அமைப்புகள் அனைத்து இணைந்து தீவிரமாக பணியாற்றுகின்றன. இதற்காக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட உடனேயே பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான நிதித் தொகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதத்தில், ரூ.31,000 கோடி மதிப்புள்ள நேரடி பலன் பரிவர்த்தனைகளை 20 கோடி ஏழைக் குடும்பங்கள் பெற்றுள்ளன. இந்த காலக்கட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கிராமப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டு ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது.

அதோடு, கடந்த 3 மாதங்களாக 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இது, அமெரிக்காவின் மக்கள் தொகையை விட இரண்டரை மடங்கு அதிகம். இங்கிலாந்து மக்கள் தொகையை விட 12 மடங்கும் ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகையை விட இரண்டு மடங்கும் அதிகமாகும். இனி வரும் மாதங்களில் ஏராளமான பண்டிகைகள் வருகின்றன. ரக்ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம், நவராத்திரி, துர்கா பூஜை, தசரா, தீபாவளி வருகிறது. இதை மனதில் கொண்டு பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டத்தை நவம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்களை வழங்கும் இந்த திட்டம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.

80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 5 மாதங்களுக்கு அரசு இலவச உணவு பொருட்களை வழங்க உள்ளது. இதன் மூலம், ரூ.90 ஆயிரம் கோடி செலவழிக்கப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக இந்த திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டு வந்த தொகையுடன் சேர்த்து மொத்தம் ரூ.1.5 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களில், அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு பொருளாதார நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வோம். தற்சார்பு இந்தியாவை படைப்பதற்காக தங்குதடையின்றி உழைப்போம். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்காக நாம் குரல் கொடுப்பதையும் தொடர்வோம். இந்த லட்சியத்துடனும் உறுதியோடும் நாட்டின் 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முன்னேற்றத்தை நோக்கி நடைபயில வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். தயவுசெய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். இவ்வாறு பிரதமர் கூறினார். கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு பிரதமர் மோடி 6வது முறையாக நாட்டு மக்களிடம் உரையாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

* உரிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது உள்ளிட்ட பிற முடிவுகளால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
* ஊரடங்கில் யார் ஒருவரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்கு இந்த நாடு முன்னுரிமை அளிக்கிறது.
* முன்பு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை 20 விநாடிகளுக்கு கழுவுதல் போன்றவற்றில் கவனமாக இருந்தோம். இன்று அவற்றை சரியாக பின்பற்றாமல் இருப்பது கவலை அளிக்கிறது.

* மலிவான விலையில் தடுப்பூசி:
கொரோனா தடுப்பூசி கிடைத்தவுடன் அதனை பொதுமக்களுக்கு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் மோடி நேற்று ஆய்வு செய்தார். இதுதொடர்பான உயர்நிலைக் கூட்டத்தில், தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகளின் தற்போதைய நிலை குறித்தும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. இதில் பிரதமர் மோடி நான்கு வழிகாட்டு கொள்கைளை பரிந்துரைத்தார். தடுப்பூசி கிடைத்ததும், டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற முன்கள வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும், தடுப்பூசி பெற எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல் யாருக்கும், எங்கும் வழங்கப்பட வேண்டும், தடுப்பூசி மலிவானதாகவும், ஒருவரும் விடுபடாத உலகளாவியதாகவும் இருக்க வேண்டும், உற்பத்தி முதல் தடுப்பூசி போடப்படும் வரை அனைத்து செயல்முறைகளையும் தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து ஆதரிக்க வேண்டும் என்றார்.

Tags : Modi , country, 80 crore poor people, till November, free ration, Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...