×

வேப்பூர் அருகே கோமுகி ஆற்றில் உடைந்த பாலத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வேப்பூர்: வேப்பூர் அருகே நகர் ஊராட்சியிலுள்ள கோமுகி ஆற்றின் குறுக்கே உடைந்த பாலத்தை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் வேப்பூர் அருகிலுள்ள நகர் ஊராட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு நகர், ஐவதுகுடி கிராமங்களை இணைக்கும் வகையில் கோமுகி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது, கடந்த 2015 ஆம் ஆண்டு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஒரு பகுதியில் பாலம் இடிந்து உடைந்து விழுந்துவிட்டது. பாலம் உடைந்து ஐந்து ஆண்டுகளாகியும் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத் தில் இக்கிராமத்தின் இளைஞர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் பயிரிடப்படும் கரும்பு, நெல், மரவள்ளி, கடலை உள்ளிட்ட பொருட்களை தலையில் சுமந்து அக்கரைக்கு கொண்டு வந்து பிறகு வாகனங்களில் எடுத்து செல்லும் நிலை உள்ளது. அதுபோல் நகர் கிராமத்திலிருந்து ஐவதுகுடி ஊராட்சிக்கு செல்ல இரண்டு கிலோமீட்டர் தூரம் மட்டுமே. இப்பாலம் இல்லாததால் இப்பகுதி மக்கள் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல எட்டு கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது, அதுமட்டுமின்றி நகர் கிராமத்தின் சுடுகாடு உடைத்த பாலத்தின் அருகில் உள்ளது, அதனால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஒத்தையடி பாதைவழியாக கொண்டு செல்கின்றனர். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் நகர் கோமுகி ஆற்றில் இடிந்து நொறுங்கி கிடக்கும் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 ஆண்டு கூட தாக்குப்பிடிக்காத பாலம்
கோமுகி ஆற்றின் குறுக்கே கடந்த 2012ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. ஆனால் உறுதியாக கட்டப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காரணம் பாலம் கட்டி மூன்றே ஆண்டுகளில் பலத்த மழையால் உடைத்து நொறுங்கி வீணாகி விட்டது. பொதுமக்கள் நடந்தும், வாகனங்களிலும் இந்த பாலத்தை கடக்க முடியவில்லை. தரமற்ற முறையில் பாலம் கட்டிய ஒப்பந்ததாரர் மீதும், அதற்கு துணைபோன அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,Vepur ,Komukhi River ,Gomukhi River , Vepur, Gomukhi river, broken bridge
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...