×

மும்பையில் தமிழ் வழியில் பாடம் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பொது தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக சில வாரங்களுக்கு முன்னர் தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதேபோல மகாராஷ்டிரா போன்ற பிற மாநிலங்களில் இருந்தபடி, தமிழக பாடத்திட்டத்தின் படி 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று ‘மும்பை சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மும்பையைச் சேர்ந்த மாணவிகள் சிலர் உருக்கமான கடிதங்களை எழுதி இருந்தனர். அதிலும் மும்பை தாராவி உள்ள உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் அனிதா என்ற மாணவி எழுதிய கடிதம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் தற்போது மும்பை தேர்வு மையத்தில் பதிவு செய்த தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற 69 மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவை: இந்த ஆண்டு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பள்ளி மாணவர்களைக் காத்திடும் பொருட்டு, தமிழ்நாட்டில் நடக்கவிருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு 69 மாணவர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : Mumbai ,government announcement ,Tamil ,Tamil Nadu ,Tamilnadu , 10th , students, Tamil language ,Mumbai, Tamilnadu government ,
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...