×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை: 22 மகப்பேறு மருத்துவர்கள் உள்ள இடத்தில் 3 மருத்துவர்கள்...கருவுற்ற பெண்கள் அவதி!!!

திருவாரூர்: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் 22 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 3 மருத்துவர்கள் மட்டுமே இருப்பதால் பிரசவத்திற்கு வருவோர் சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அதிகளவு பரவி வரும் இந்த காலகட்டத்தில், கர்ப்பிணி பெண்கள் நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனைக்கு நாள்தோறும் நூற்றுநாணக்கானோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். எண்ணற்ற உள்நோயாளிகளும் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புற மக்கள் அனைவரும் இந்த மருத்துமனையில்தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இங்கு தலைமை மகப்பேறு மருத்துவர் உட்பட 22 மகப்பேறு மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில் தற்போது, 4 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் ஒருவர் விடுப்பில் சென்றுவிட்டதால் மீதமுள்ள 3 பேர் மட்டுமே சிகிச்சையளித்து வருகின்றனர். திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஊரடங்கு தொடங்கிய மார்ச் மாதத்தில் மட்டும் 217 பிரசவங்கள் நடந்துள்ளன. இதில் 117 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இவ்வாறு கடந்த 4 மாதங்களில் மட்டும் 953 பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில் கொரோனா தொற்றுடன் வரும் கர்ப்பிணி பெண்களுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டு, அதற்கென தனி மகப்பேறு மருத்துவர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவர்கள் பற்றாக்குறைகளுடனே இந்த அனைத்து பிரசவங்களும் நடந்துள்ளன. மேலும், இந்த மருத்துவமனைக்கு 8 மகேப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் மருத்துவ தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து, மகப்பேறு பிரிவில் காலியாக உள்ள இடங்களை விரைவில் நிரப்பவேண்டுமென்று திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Gynecologists ,Doctors ,Thiruvarur Government Hospital , Thiruvarur, Government Hospital, Gynecologists and Obstetricians
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை