×

நடத்தையில் மேம்பாடு தேவை: திருச்சி சரகத்தில் 80 காவலர்கள் மாற்றம்...டி.ஐ.ஜி அறிவிப்பு!

திருச்சி: திருச்சி சரகத்தில் நடத்தையில் மேம்பாடு தேவைப்படும் 80 காவலர்கள் மக்களின் நேரடி தொடர்பு பணியில் இருந்து மாற்றப்படுவதாக திருச்சி டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். திருச்சி, கரூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களை சேர்ந்த 80 காவலர்களுக்கு பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்க காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சாத்தான்குளம் சம்பவத்திற்கு நாளுக்கு நாள் கண்டனம் வலுத்து வருகிறது.

தமிழகம் முழுவதிலும் போலீசார் மனஅழுத்தத்தில் இருப்பதினாலேயே இப்படி நடந்துகொள்வதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்களுக்கு தகுந்த உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தான் திருச்சி சரகத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 5 மாவட்டங்களில் 80 காவலர்கள், காவல்நிலைய பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரு மாதகாலம் பொதுமக்களுடன் நல்லுறவை கடைபிடிப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. பொதுமக்களிடம் எவ்வாறு கண்ணியமாக நடந்துகொள்வது, முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் சூழல் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் அளிக்கப்படவிருப்பதாக திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், காவலர்களின் நடத்தையில் மேம்பாடு தேவைப்படுவதால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் மற்றவர்களிடம் பழகும் விதத்தில் குறைபாடு இருப்பது கண்டுபிடித்தோம். தொடர்ந்து மக்களிடம் பழகும் திறனை மேம்படுத்த காவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர் பணியில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Trichy Sargam ,DIG , Need for Improvement in Behavior: 80 Guards Transition in Trichy Sargam ... DIG Announced!
× RELATED மனைவி நடத்தையில் சந்தேகம் மனைவி...