×

புதுக்கோட்டையில் அரசு கொள்முதல் நிலையத்தில் 5000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணானதால் விவசாயிகள் வேதனை!!!

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல்மூட்டைகள் அனைத்தும் நீரில் மூழ்கி வீணானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே கொரோனவால் பலவைகயான விற்பனைகள் பாதிப்பட்டுள்ள நிலையில் தற்போது நடந்துள்ள சம்பவம் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெடுவாசல் மட்டுமின்றி தஞ்சை மாவட்ட கிராமங்களான களத்தூர், சேருவாவிடுதி, துலுக்கவிடுதி மற்றும் ஆணவம் உள்ளிட்ட கிராம விவசாயிகளும் தங்களது நெல்மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, கோடை சாகுபடி முடிவுற்று இருக்கும் நிலையில், விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுவாசலில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர்.

அப்போது, அங்குள்ள பணியாளர்கள் முறையாக நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாததால், பல்லாயிரக்கணக்கான நெல்மூட்டைகள் அங்கேயே பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெடுவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால், அங்கு அடுக்கி வைக்கப்பட்ட 5000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமாகின. நெல்மூட்டைகளின் மதிப்பு பல லட்சம் இருக்குமென கூறும் விவசாயிகள் அரும்பாடுபட்ட அனைத்தும் வீணாகிவிட்டதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், நெல்மூட்டைகளை விற்பனைக்காக, நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது அங்கு பணியாளர்கள் முறையாக கொள்முதல் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றும் வியாபாரிகளிடம் 45 ரூபாய் கமிஷன் என்ற அடிப்படையில் அவர்கள் கொள்முதல் செய்வதால், விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, விவசாயிகள் மூட்டைக்கு 35 ரூபாய் கமிஷன் கொடுத்தால் மட்டுமே பணியாளர்கள் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதாகவும், இதனாலேயே கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 5000க்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி தற்போது, மழையில் நனைந்து பாழாகிவிட்டதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர். இதனை அரசு உரிய ஆய்வு செய்து கூடுதல் பணியாளர்களை கொண்டு அங்கு குவிக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை முறையாக கொள்முதல் செய்வதோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை விரைவாக வழங்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government procurement center ,Pudukkottai , More than 5,000 rice paddies were washed away at the government procurement center in Pudukkottai
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...