×

இந்திய-சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சக்தி வாய்ந்த பீஷ்மா பீரங்கிகளை நிறுத்திய இந்திய ராணுவம்..!!

டெல்லி: இந்திய-சீன எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15ம்  தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், சீன தரப்பில் 35 பேரும் உயிரிழந்தனர். ஆனால் உண்மையான எண்ணிக்கையை சீனா சொல்லவில்லை.

இந்த மோதல் தொடர்பாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இதனிடையே கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை குவித்துள்ள காட்சிகள் செயற்கைக் கோள் மூலமாக படமாக்கப்பட்டு வெளியாகி உள்ளன. மேலும் சீனா தனது உரிமைகோரும் பகுதியை தாண்டி 423 மீட்டர்  நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து உள்ளது.

இந்தியா சீனா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் இருநாடுகளும் படைகளைக் குவித்த வண்ணம் உள்ளன. இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மூத்த இராணுவத் தளபதிகள் இன்று சுஷூலில் சந்தித்து பரஸ்பர விதிமுறைகளை விரிவுபடுத்துதல் மற்றும் படையை குறைத்தல் ஆகியவை குறித்து பேச்சுவார்த்தையை தொடங்கினர்.

இந்த நிலையில் இந்தியா தனது சக்திவாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை அதிகளவுக்கு எல்லையில் குவித்து உள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட இந்த பீரங்கி ஆயிரம் குதிரை விசை ஆற்றல் கொண்டதாகும். சீனா படைகளை குவித்ததை தொடர்ந்தே இந்தியாவும் படைகளை குவித்து பதிலடிக்கு தயார் நிலையில் உள்ளது.

Tags : Indian Army ,valley ,border ,Kalwan ,Chinese ,Ladakh ,Indo ,T-90 ,Galwan Valley ,Bhishma Tanks , T-90 Bhishma Tanks deployed Along LAC In Galwan Valley To Counter China
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...