×

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் படுகொலை.. போலீசாரின் மிருகத்தனமான செயலால், தமிழ்நாட்டிற்கு இழிவு, பிற போலீசாருக்கு அவப்பெயர் : ஐ.நா. கடும் கண்டனம்

சென்னை : சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த வழக்கில், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமியை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி உள்ளது. இந்த கடிதத்தை ஐ.நாவின் அமைப்புகளில் ஒன்றான UNADAP எனப்படும் அமைதி மற்றும் மேம்பாட்டு மையம் அனுப்பி வைத்துள்ளது. அதில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் துன்புறுத்தப்பட்டு, கொல்லப்பட்டது உலக சமுதாயத்தின் கவனத்தை தமிழ்நாட்டின் பக்கம் திருப்பி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மனிதத்திற்கும் எதிரான குற்றம் நடந்தேறி உள்ளதாக ஐ.நா. கண்டித்துள்ளது. போலீசாரின் இந்த செயல் மிருகத்தனமானதும், பயங்கரமானதும் ஆகும் என்று கூறியுள்ள ஐ.நா.அமைப்பு,  இது தமிழ்நாட்டிற்கு இழிவையும், பிற போலீசாருக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறியிருக்கிறது. அண்மையில் நேத்ரா என்ற மதுரை சிறுமி, ஐ.நாவின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டதை உலக நாடுகள் பாராட்டின என்றும் ஆனால் தற்போது இந்த படுகொலை அதிர்ச்சி அளிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தி உள்ளது. மனித கொலை செய்துள்ள போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.அறிவுறுத்தி உள்ளது. ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இறப்பு வழக்கில் குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அலுவல் ரீதியான அறிக்கையை ஐ.நா.எதிர்பார்ப்பதாகவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. அந்த கடிதத்தின் நகல், பிரதமர் மோடிக்கும் ஆளுநர் பன்வரிலால் அவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.


Tags : merchants , Satan, Merchants, Massacre, Brutality, Action, Tamil Nadu, UN , Condemnation
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...