×

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும்: உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவிப்பு!!

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு தற்காலிகமாக மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு சிறையில் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த விசாரணை என்பது கோவில்பட்டியில் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் நீதி விசாரணைக்காக உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அவர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை கேட்டபோது, காவல்துறையின் உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் அவரை ஏளனமாக பேசியதாகவும், வழக்கு ஆவணங்களை அளிக்கவில்லை என்று கூறி நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இ-மெயில் மூலம் புகாரை அனுப்பியிருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம், காவல்துறையின் உயர் அதிகாரிகளான ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி. மற்றும் காவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அந்த மூன்று பேரையும் இன்று ஆஜர்படுத்தியிருந்தது. இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி, தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உடலில் அதிக காயங்கள் இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனையின் அறிக்கையின் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. முதல் நிலை பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.

நீதி கிடைக்கும் என ஜெயராஜ் குடும்பத்தினர் நம்புகின்றனர், எனவே ஒரு நொடிகூட வீணாகக்கூடாது. சி.பி.ஐ. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? சி.பி.ஐ. விசாரிக்கும் வரை நெல்லை சி.பி.சி.ஐ.டி. உடனடியாக வழக்கு விசாரணையைக் கையில் எடுக்க இயலுமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இன்று மதியத்திற்குள்அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர். மேலும் மாஜிஸ்திரேட்டை காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் காவல் அவமதித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.

இதனிடையே மன அழுத்தத்தால் மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் தவறாக நடத்துக்கொண்டுள்ளனர் எனத் தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசிய ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் மீதான அவமதிப்பு வழக்கு விசாரணை தொடரும். நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., காவலர் நான்கு வாரத்தில் விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பல அனுமதிகளைப் பெற்று சி.பி.ஐ. விசாரணை தொடங்கும் முன் தடயங்கள் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அச்சத்துடன் சாட்சியமளித்த காவலர் ரேவதிக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தந்தை, மகன் மரண வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கும் முன் நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி அனில்குமார் இன்றே கையில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags : judges ,Supreme Court ,sathankulam ,CBCID , CBCID to investigate father-son death case at sathankulam
× RELATED தேர்தலில் வாக்களிப்பதை குடிமக்களின்...