×

பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் ரோபோவை கண்டுபிடித்த கும்பகோணம் கல்லூரி மாணவர்கள் : அமைச்சர் துரைக்கண்ணு பாராட்டு!!

தஞ்சை : கும்பகோணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பேருந்துகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் நவீன ரோபோ கருவியை கும்பகோணம் தனியாா் கல்லூரி மாணவா்கள் கண்டுபிடித்துள்ளனா். கும்பகோணம் அருகே கள்ளப்புலியூரில் அரசு உதவிபெறும் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இயந்திரவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் எம். சஞ்சய்பாலாஜி, சி. ஜோஸ்வா ஆராக் ஆஸ்டின், நாட்டு நலப்பணித் திட்ட முன்னாள் மாணவா் கே. முத்துகிருஷ்ணன் ஆகியோா் இயந்திரவியல் துறைத் தலைவா் ஜி.பி. சதீஷ்குமாா் வழிகாட்டுதலுடன் ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனா்.

இந்த இயந்திரம் பேருந்துகளின் இருக்கைகள் பகுதிக்குச் சென்று தூசி, குப்பைகளைச் சுத்தம் செய்வதுடன்,  கிருமி நாசினியைத் தெளித்து சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தானாக இயங்கி செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தின் செயல்விளக்கம் கல்லூரி வளாகத்தில் வேளாண் துறை அமைச்சா் இரா. துரைக்கண்ணு முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.அப்போது ரோபோ இயந்திரத்தின் செயல்பாடுகளைப் பாா்வையிட்ட அமைச்சா் ரா.துரைக்கண்ணு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கொரோனா போன்ற கொடிய நோய்த்தொற்று பரவிக்கொண்டிருக்கும் போர்கால கட்டத்தில் மாணவா்களின் இதுபோன்ற அரிய கண்டுபிடிப்புகள் நோய் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், எளிதில் சுகாதாரமான சூழலை உருவாக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது.

இந்த இக்கட்டான காலத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு சிரமம் இல்லாமல் இதுபோன்ற தானியங்கி இயந்திரத்தின் மூலம் விரைவாகவும், எளிமையாகவும் பொது போக்குவரத்து வாகனங்களை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த முடியும், என தெரிவித்துள்ளார். பின்னா் ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்த மாணவா்களையும், வழிகாட்டிய ஆசிரியரையும் அமைச்சா் பாராட்டினாா். இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலா் டி.செந்தில்குமாா், ஆலோசகா் கோதண்டபாணி, முதல்வா் பாலமுருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார்கள்.

Tags : college students ,Kumbakonam ,Kumbakonam College , Buses, Antiseptic, Robot, Kumbakonam, College, Students, Minister
× RELATED கும்பகோணம் அரசு மருத்துவமனையில்...