×

சாத்தான்குளம் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காத போலீசாருக்கு ஐகோர்ட் கடும் கண்டனம்

*வருவாய்த்துறையினர் மூலம் தடயங்கள் சேகரிக்க உத்தரவு

மதுரை :  மாஜிஸ்திரேட் விசாரணைக்கு ஒத்துழைக்காததற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை  வருவாய்துறையினர் மூலம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தடயங்களை சேகரித்து ஆவணப்படுத்த வேண்டுமென அதிரடியாய் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கோவில்பட்டி கிளைச்சிறையில் இறந்தது தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்தது. கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரிக்கவும், மாவட்ட அமர்வு நீதிபதி கண்காணிக்கவும் உத்தரவிட்டிருந்தது. மேலும், இந்த வழக்கை ஐகோர்ட் கிளை தீவிரமாக கண்காணிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதியளித்த ஐகோர்ட் கிளை, பிரேத பரிசோதனை அறிக்கை, மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை உள்ளிட்டவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (ஜூன் 30) விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் ஐகோர்ட் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான வழக்கை, சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ எனக்கூறி இருவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘சம்பந்தப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றுவதோ, மாற்றாமல் இருப்பதோ அரசின் கொள்கை முடிவுக்கு சம்பந்தப்பட்டது. அதற்கென வழிகாட்டுதல்கள் உள்ளன. தாக்கல் செய்யப்பட்டுள்ள முதல் கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை பதிவாளர் (நீதித்துறை) உரிய நகல் எடுத்து பாதுகாக்க வேண்டும். பிறகு அந்த சான்றிதழை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் அனுப்பியுள்ளவற்றின் மீது முன்னுரிமை அடிப்படையில் ஆய்வு செய்து விரைவாக அறிக்கையளிக்க சென்னை தடயவியல் துறை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவில்பட்டி கிழக்கு, சாத்தான்குளம் காவல் நிலையங்களில் பதிவான வழக்குகளின்  கேஸ் டைரியை, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிபதியிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு சிபிஐ விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை இந்த நீதிமன்றம் தாமாக முன்வந்தே விசாரித்தது. அங்கு நடைபெறும் விசாரணையை நாங்கள் கண்காணிக்கிறோம். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு சாத்தான்குளம் போலீசார் ஒத்துழைக்கவில்லை என மாவட்ட நீதிபதி எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். இது ஏற்புடையதல்ல.

எனவே, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் தடயங்களை சேகரித்து பாதுகாத்திடும் வகையில் வருவாய்த்துறை அதிகாரியை, கலெக்டர் நியமிக்க வேண்டும். தூத்துக்குடி நடமாடும் தடயவியல் ஆய்வகத்தினர் சாத்தான்குளம் காவல் நிலையம் சென்று அனைத்துவிதமான தடயங்களையும் சேகரிக்க வேண்டும். தேவைப்பட்டால் தடயவியல் நிபுணர்களையும் அழைத்துக் கொள்ளலாம். போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உளவியல்ரீதியிலான மனநல ஆலோசனைகள் வழங்க ஏற்கனவே ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 30க்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

மாஜிஸ்திரேட்டை ஒருமையில் பேசிய போலீஸ்காரர் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி உட்பட 3 பேரை இடம் மாற்ற உத்தரவு

சாத்தான்குளம் வியாபாரிகள் கோவில்பட்டி சிறையில் மரணமடைந்தது தொடர்பாக விசாரணை நடத்தும் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தனது அறிக்கையை நேற்று மாலை இ-மெயில் மூலம் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளார்.  இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மாலை பிறப்பித்த உத்தரவு: கோவில்பட்டி மாஜிஸ்திரேட் அறிக்கை பெறப்பட்டது. அதில், மாவட்ட காவல்துறை நிர்வாகம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முடிந்தவரை மாஜிஸ்திரேட் விசாரணையை தடுக்கின்றனர். கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் சாத்தான்குளம் காவல் நிலையத்திலேயே உள்ளனர். மாஜிஸ்திரேட் விசாரணையை முழுமையாக போலீசார் வீடியோ பதிவு செய்கின்றனர். தேவையான ஆவணங்களை தர போலீசார் மறுக்கின்றனர்.

 மகாராஜன் என்ற போலீஸ்காரர், ‘உன்னால ஒன்னும் செய்ய முடியாதுடா’ என மாஜிஸ்திரேட்டை நோக்கி ஒருமையில் பேசியுள்ளார். எனவே, இந்த அறிக்கையின் அடிப்படையில், தூத்துக்குடி கூடுதல் எஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியாரை பணியிட மாறுதல் செய்ய வேண்டும். அவர்கள் மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்கிறோம். 30ம் தேதி (இன்று) விசாரணையின்போது காலை 10.30 மணிக்கு மூவரும் நேரில் ஆஜராக வேண்டும். இவர்களுடன் டிஐஜி மற்றும் எஸ்பி ஆகியோரும் ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Icorte ,magistrate ,Sathankulam ,Condemns Police ,branch , magistrate,Sathankulam case ,Condemns Police,Highcourt
× RELATED கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய...