×

சேலம் அருகே சோதனைசாவடியில் போலீசாரை தாக்கிய அதிமுக மாஜி எம்பி மீது 2 பிரிவுகளில் வழக்கு

சேலம் : சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடியில் நேற்றுமுன்தினம் இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிமுக முன்னாள் எம்பிஅர்ஜூனன் வந்த காரை மடக்கிய போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்,தான் முன்னாள் எம்பி என கூறினார். அங்கிருந்த போலீசார் அடையாள அட்டையை காட்டுங்கள் என கூறியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.இந்த மோதல் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.  

அந்த வீடியோவில், `காரில் இருந்து இறங்கி வரும் அர்ஜுனனை போலீசார் செல்போனில் படம் பிடிக்கின்றனர். அப்போது அவர் கோபமாக, ஏன் படம் பிடிக்கிறாய்? என கேட்கிறார். எஸ்.எஸ்.ஐ. ரமேஷ், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார்.  ஒரு கட்டத்தில் போலீசாரை அவமரியாதையாக பேசும் அர்ஜூனனை,மரியாதையாக பேசுமாறு போலீசார் கூறுகின்றனர். என்ன மரியாதை கொடுக்க வேண்டும்? அங்க (சாத்தான்குளத்தில்) போலீஸ் 2 பேரை அடித்துக்கொன்ற மாதிரி... போலீசுக்கு அவ்வளவு அதிகாரம் கொடுத்திருக்காங்களா? அதிகபிரசங்கிதனமா? என கூறுகிறார். பிறகு வண்டியில் ஏறும் அர்ஜூனன், செருப்பால் அடிப்பேன், பிச்சைக்கார பசங்க’’ என்ற வார்த்தையை கூறுகிறார்.

இதனால் ஆத்திரமடைந்த எஸ்.எஸ்.ஐ., ‘அதை விட நீ பிச்சைக்காரன்’’ என்று கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அர்ஜூனன், காரில் இருந்து இறங்கி வந்து,எஸ்.எஸ்.ஐ. வயிற்றில் குத்துகிறார். உடனே எஸ்.எஸ்.ஐ.ரமேஷ்,அவரை நெஞ்சில் அடித்து தள்ளுகிறார்.இதில் நிலை தடுமாறும் அர்ஜூனன், எஸ்எஸ்ஐயை காலால் எட்டி உதைக்க முயற்சி செய்கிறார்.அங்கிருந்தவர்கள் அவரை சமாதானப்படுத்தி காரில் அனுப்பி வைக்கிறார்கள். இந்த காட்சி வைரலாக பரவி வரும் நிலையில்,அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் எஸ்எஸ்ஐ ரமேஷ் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்ட கருப்பூர் போலீசார், மாஜி எம்பி அர்ஜூனன் மீது, தகாத வார்த்தையால் பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. பிரச்னையில் சிக்கியுள்ள அர்ஜூனன்,அரசியலுக்கு வருமுன் போலீஸ் எஸ்.ஐ.யாக பணியாற்றியவர். பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் சேர்ந்தார். தர்மபுரி தொகுதி எம்பியாக இருந்த அவர், பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். தாரமங்கலம் தொகுதியில் சேவல் சின்னத்தில் நின்று எம்எல்ஏவானார். அதன்பிறகு வீரபாண்டி தொகுதியில் அதிமுக எம்எல்ஏவானார். அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த அவர்,தேமுதிக, தீபா பேரவை ஆகிய கட்சிகளுக்கு மாறினார். தற்போது மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.


Tags : Majhi ,AIADMK ,policemen ,checkpoint ,TN ,Salem ,MP assaults cop toll plaza , K Arjunan, Salem-Bengaluru highway, Toll gate
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...