×

ஆவடி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு அபாயம்

ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரியும் பன்றிகளால் பொதுமக்கள் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆவடி மாநகராட்சியில் ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பாதாகை, அண்ணனூர், பட்டாபிராம், மிட்டினமல்லி,  முத்தாபுதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்குள்ள 48 வார்டுகளில் 4 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு இந்திய பாதுகாப்புத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, அண்ணனூர் ரயில்வே பணிமனை, இந்திய விமான படை பயிற்சி மையம் மற்றும் அரசு துறை அலுவலகங்கள், கல்லூரி, பள்ளிகளும் உள்ளன. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகளால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும், நோய் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,  ஆவடி மாநகராட்சி பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரில் விழுந்து புரளும்போது தூர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரப்புகின்றன. மேலும், பன்றிகள் சுற்று சுவர் இல்லாத வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. சில நேரங்களில் அவைகள் உணவு பொருட்களை விட்டு வைப்பதில்லை. மாநகராட்சி பகுதிகளில் பன்றிகளை வளர்க்கவும், இறைச்சிகளை விற்கவும் கூடாது என சட்ட விதிகள் உள்ளன. இதனை மீறி நகர எல்லைக்குள் சிலர் பன்றிகளை வளர்க்கின்றனர்.

இவர்கள் மீது பொதுமக்கள் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம்  புகார் கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனால் பொதுமக்கள் தொற்றுநோயாலும், குழந்தைகள் மூளை காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொற்று நோயை தடுக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Awadhi Municipality Awadhi Corporation , Risk , health disorder, pigs roaming, Awadhi Municipality
× RELATED ஹெல்மெட் போடாமல் பைக்கில் வந்து வாக்களித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி