×

ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 30 சதவீதமாக குறைப்பு: ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடு 30 சதவீதமாக குறைக்கப்பட்டு வழங்கப்படுவதால், ரேஷன் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. பொது வினியோக திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உட்பட கூட்டுறவு அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இந்த ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாதம்தோறும் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை அடிப்படையில், வட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவு துறை உயர் அதிகாரிகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கருத்துரு அனுப்புகின்றனர். இதன் அடிப்படையில் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நுகர்பொருள் வாணிபக்கிடங்கு மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இதில், மண்ணெண்ணெய் வினியோகமும் பொது வினியோக திட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே, மண்ணெண்ணெய் பற்றாக்குறையாகவே ஒதுக்கீடு செய்யப்படுவதாக ரேஷன்கடை ஊழியர்கள் புலம்பி வருகின்றனர். தற்போது, இந்த அளவும் குறைக்கப்பட்டு 30 சதவீதம் மட்டுமே வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

பருவமழை காலங்களில் கிராமப்புறங்களில், தொழிலாளர்கள் குடும்பங்களில் மண்ணெண்ணெய் பயன்பாடு அதிகமிருக்கும். எனவே, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வினியோகிக்கும் நாட்களுக்காக கிராம மக்கள் காத்திருப்பது வழக்கம். ஆனால், இம்மாதத்துக்கான ஒதுக்கீடு தாமதமாகவும், குறைவாகவும் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அனைத்து கடைகளுக்கும், 30 சதவீதம் வரை, பற்றாக்குறையாகவே மண்ணெண்ணெய் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு ரேஷன் கார்டுக்கு 3 லிட்டர் வீதம் வழங்கப்பட வேண்டிய மண்ணெண்ணையின் அளவு ஒரு லிட்டராக தற்போது குறைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்தாலும் ஏற்றுக்கொள்ளாத மக்கள், ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாகிவிட்டது. எனவே, பருவமழை காலத்தில், ரேஷன் கடைகளுக்கு தேவையான மண்ணெண்ணெய் கிடைக்கும் வகையில், வட்ட வழங்கல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். 


Tags : shops , Reduction, kerosene , ration shops, 30 percent, Public debate with staff
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி