சென்னை மாநகராட்சியின் கோவிட் கேர் மையங்கள் எப்படி இருக்கிறது?

*சமூகவலைதளங்களில் வைரல் ஆகும் வீடியோ

சென்னை : சென்னை மாநகராட்சி சார்பில் நந்தம்பாக்கம் கோவிட் கேர் மையம் செயல்படும் விதம் தொடர்பாக அங்கு சிகிச்சை பெற்ற ஒருவர் பதிவு செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் படுக்கை வசதிகளை அதிகரிக்கும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை தவிர்த்து, மாநகராட்சி சார்பில் லேசான அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு கோவிட் கேர் மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேலும், சென்னையில் கொரோனா தொற்று உள்ளவர்களை 4 பிரிவுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. மூச்சு திணறல் போன்ற  பிரச்னைகள் இருந்தால் அவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவ கண்காணிப்பு தேவை என்பவர்களுக்கு சுகாதாரத்துறை கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு கோவிட் கேர் மையங்களிலும், எந்தவித அறிகுறியும் இல்லாதவர்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தியும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன்படி லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு 33 ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கோவிட் கேர் மையங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் தற்போது 55 மையங்களில் 17 ஆயிரத்து 500 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 500 படுக்கைகளுடன் கோவிட் கேர் மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் சிகிச்சை பெற்ற இளைஞர் ஒருவர் தனக்கு அளிக்கப்பட்ட உணவுகள், சிகிச்சை முறை உள்ளிட்டவைகள் தொடர்பாக ஒரு நாள் நிகழ்வுகள் முழுவதையும் வீடியோ பதிவு செய்துள்ளார். அதில் தினசரி, காலை, இரவு உள்ளிட்ட நேரங்களில் அளிக்கப்பட்ட உணவு வகை, அளிக்கப்பட்ட சிகிச்சை முறை, யோகா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி சமூக வலைததள பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Related Stories:

>