சாத்தான்குளம் சம்பவம் குறித்து வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை : சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

சென்னை :  சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளையும், வதந்திகளையும் சம்மந்தமில்லாத வீடியோ போன்றவற்றையும் சிலர் பரப்பிவருவதாக புகாரின் பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு  சைபர் க்ரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணையில் டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றில் சிலர் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்துடன் இணைத்து பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி வீடியோ குறித்து விசாரணை செய்ததில் அந்த வீடியோ 2019 ம் ஆண்டு மகாராஷ்ரா மாநிலம் நாக்பூர் அருகே நடைபெற்ற தனிநபர்கள் சம்மந்தப்பட்ட ஒரு வீடியோ என்பதும், அதன் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்ததும் தெரியவருகிறது. எனவே மேற்படி வீடியோவை எடுத்து சாத்தான்குளம் சம்பவத்துடன் சம்மந்தப்படுத்தி விஷமிகள் சமூக வலைத்தளங்களில் தவறாக தகவல்களை பரப்பி வருவது விசாரணையில் தெரியவருகிறது.

எனவே, மேற்படி பதிவிட்டவர்களை கண்டுபிடித்து தக்க சட்டப்பூர்வான நடவடிக்கைகள் மேற்கொள்ள புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. தனிநபர்கள் மற்றும் சமூக வலைத்தள குழக்களில் தவறான வதந்தியை பரப்புவர்கள் மற்றும் பதிவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>