×

அதிமுக-பாஜக நிர்வாகிகள் இணைந்து சமூக வலைதளத்தில் வாகை சந்திரசேகர் மீது அவதூறு பதிவு

* போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பரபரப்பு புகார்

சென்னை : திமுக எம்.எல்.ஏ.வாகை சந்திரசேகர் மீது சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி திமுக பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வரும் அதிமுக-பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக எம்எல்ஏக்களாக மா.சுப்பிரமணியன், வாகை சந்திரசேகர் ஆகியோர் நேற்று புகார் அளித்தனர்.

பின்னர் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  சேலம் மாவட்டம்  ஓமலூர் சுங்கச்சாவடியில்  அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் என்பவருக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட தகராறில் அவர் காவல்துறையை காலால் எட்டி உதைப்பதும்,  காவல்துறையினரும் அவரை தாக்குவது போன்ற காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் எரச்சகுளம் மாரியப்பன் என்கிற பாஜகவை சேர்ந்த ஒருவர், தன்னுடைய முகநூல் பக்கத்தில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வாகை சந்திரசேகர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளார் என்று அவதூறான கருத்தை வெளியிட்டுள்ளார்,  அதையே பாஜகவின் தொழில்நுட்ப தலைவர் எஸ்.சஞ்சய் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்திலும், இதே போன்று  அதிமுக ஊடகப் பிரிவு சார்ந்த கோவை சத்யன் என்பவர் அவருடைய டிவிட்டர் பக்கத்திலும் அவதூறாக செய்தியை வெளியிட்டுள்ளார்.

இது திட்டமிட்டு திமுகவின் பெயரை களங்கப்படுத்தும் முயற்சி. கடந்த 30  ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் வாகை சந்திரசேகர். திமுகவின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாஜகவினர் இதுபோன்று தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் மாநில தகவல் தொழில்நுட்பத்தின் தலைவரே இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுவது அநாகரீகமானது. அதிமுக ஊடகப்பிரிவை சேர்ந்த கோவை சத்தியன் தனது சொந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  யார் என்று கூட அறிந்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது விந்தை. இதன்மூலம் அதிமுகவும் - பாஜகவும் கூட்டு சேர்த்துக்கொண்டு திமுக மீது அவதூறு பரப்பி வருகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.  எனவே, எரச்சகுளம் மாரியப்பன், சஞ்சய், கோவை சத்யன் ஆகிய 3 பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : executives ,BJP ,AIADMK ,Wagai Chandrasekhar ,Vagai Chandrasekar , Vagai Chandrasekar, DMK MLA, ADMK, BJP,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...