×

பிரான்சில் இருந்து முதல் கட்டமாக 6 ரபேல் போர் விமானங்கள் ஜூலை 27ல் ஒப்படைப்பு: அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக தகவல்

புதுடெல்லி: பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, முதல்கட்டமாக 6 ரபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 27ல் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பிரான்சிடம் இருந்து அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரபேல் போர் விமானங்களை ரூ 58,000 கோடிக்கு வாங்க கடந்த 2016 செப்டம்பரில் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இரண்டு இயந்திரம் கொண்ட ரபேல் போர் விமானம் வானில் இருந்தபடியே, வான் இலக்கை தாக்கவும், பூமியில் உள்ள இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. இந்த நவீன போர் விமானம் இந்திய ராணுவத்துக்கு வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது. இதனிடையே,  இந்தியா-சீனா இடையிலான எல்லை பிரச்னைக்கு பிறகு, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை கடந்த 2ம் தேதி தொலைபேசியில் தொடர்புக் கொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரபேல் விமானங்களை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து பேசினார்.

இந்நிலையில், முதல் கட்டமாக 6  ரபேல் போர் விமானங்கள் ஜூலை 27ம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், சுவீடன் போன்ற நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான அச்சுறுத்தல்களை சமாளிக்க வடிவமைக்கப்பட்டுள்ள, அடுத்த தலைமுறைக்கான கருவிகளுடன் இந்தியாவுக்கான ரபேல் போர் விமானமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை தவிர, இஸ்ரேல் சாதனங்கள் பொருத்தப்பட்ட திரைகள், ரேடார் எச்சரிக்கை உள்ளீடு, குறைந்த அலைவரிசையை தடை செய்யும் டிரான்ஸ்மீட்டர், 10 மணி நேர விமான தகவல் பதிவு, புற ஊதா கதிர்கள் தேடல், கண்காணிப்பு அமைப்புகள் உள்ளிட்ட இந்தியா குறிப்பிட்ட பல்வேறு மாற்றங்களுடன் ரபேல் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரபேல் விமானங்கள் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டாவது கட்டமாக அனுப்பப்படும் ரபேல் விமானங்கள் மேற்கு வங்கத்தில் உள்ளள ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இதற்காக இந்த இரண்டு விமானப்படை தளங்களின் உள்கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ₹400 கோடி செலவில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதில் 30 விமானங்கள் போருக்கும், 6 பயிற்சிக்காகவும் பயன்படுத்தப்பட உள்ளன.

Tags : fighters ,Rafael ,France ,Ambala Air Force , 6 Rafael fighters, delivered, France, July 27,Ambala Air Force
× RELATED சில்லி பாயின்ட்…