×

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள இசை கலைஞர்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு

சென்னை : கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கோயில்கள் திறக்க தடை, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், மங்கல இசைக் கருவிகளை வாசிக்கும் நாதஸ்வரம், தவில் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள், கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு இசை வேளாளர் இளைஞர் பேரவை கூட்டமைப்பின் நிறுவன தலைவர் குகேஷ், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளது போல, நாதஸ்வரம், தவில், மிருதங்கம், வயலின், வீணை போன்ற வாத்திய இசைக் கலைஞர்களுக்கும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும் என தனியாக நலவாரியம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ் நாட்டுப்புற இசைக்கலைஞர்களுக்கு என தனி நல வாரியம் ஏற்கனவே உள்ளது எனவும், பாரம்பரிய இசைக்கலஞர்களுக்கு நிவாரண உதவி கோரி ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு ஜூலை 1ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் ஜூலை 1ம் தேதி (நாளை) விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : musicians , high court,musicians ,lockdown period,case registered
× RELATED திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெறுகிறது