×

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

* சென்னை, காஞ்சி, செங்கை, திருவள்ளூர், மதுரையில் 5ம் தேதி வரை தீவிர ஊரடங்கு

* மாநிலம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் அனைத்துக் கடைகளும் மூடல்

*  கிராமங்களில் 6ம் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறப்பு

*  மாவட்டங்களில் 15 வரை பஸ் போக்குவரத்து நிறுத்தம்

சென்னை : தமிழகத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு நேற்று இரவு அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களில் மட்டும் 5ம் தேதி வரை தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும். மாநிலம் முழுவதும் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் அனைத்து கடைகளும் மூடப்படும். 6ம் தேதி முதல் கிராம வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15ம் தேதி வரை மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி (இன்று) வரை 5 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு மற்றும் ஊரடங்கு இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் 6வது கட்ட ஊரடங்கை அறிவிக்கலாமா, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கை ரத்து செய்யலாமா என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 10.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டம் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்துக்கு பிறகு பேட்டி அளித்த மருத்துவ நிபுணர்கள், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு மட்டுமே தீர்வு ஆகாது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்” என்று ஆலோசனை வழங்கினர்.

இதையடுத்து, தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் நோய்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது. இதை தொடர்ந்து, கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் (இன்று) 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

29ம் தேதி (நேற்று) மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தற்போது எடுக்கப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதால்தான், கொரோனா நோய்த்தொற்றை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது எனவும், நோய் தடுப்பு கட்டுப்பாட்டு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்த வேண்டும் என கருத்துகளை தெரிவித்தார்கள். பல்வேறு தினங்களில் முதலமைச்சர் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில், குறிப்பாக ஜூன் 22ம் தேதியன்று நடத்தப்பட்ட காணொலிக் காட்சியில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், ஊரடங்கை தளர்த்துவதற்காக நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், 29ம் தேதி (நேற்று) பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து, கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30ம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கு உத்தரவு, ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும், முழு ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ள பகுதிகளான சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூந்தமல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் கடந்த 19ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கடந்த 24ம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு, கொரோனா நோய்த் தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு உதவியதால், இந்த முழு ஊரடங்கு மேற்கண்ட பகுதிகளில் மட்டும் ஜூலை 5ம் தேதி வரை தொடரும்.

கடந்த 19ம் தேதிக்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தொடரும். அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த 24ம் தேதிக்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே ஜூலை 6ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூலை 31ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தொடரும்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி, பழக்கடைகளைப் போன்று சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு: 5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

* பொது பேருந்து போக்குவரத்து: மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இ-பாஸ் முறை :  இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும், நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் 6.7.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

* தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
* ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுகிறது.
* முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல், அரசு தனியாக வழங்கிய நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள், சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் 1.7.2020 முதலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகள் மற்றும் மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 6.7.2020 முதலும் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது:

* கிராமப்புறங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும், கிராமப்பகுதிகளில் உள்ள பெரிய வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படமாட்டாது.
* தொழில் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 20 விழுக்காடு பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை ஊக்குவிக்க வேண்டும்.
*அனைத்து தனியார் நிறுவனங்களும் 100 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
* வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை) 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். மேலும், ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் இருக்கும் பொருட்டு தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும். இதுவன்றி, கடைகளில், குளிர் சாதன வசதி இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது.
* தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட இதர கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
* உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, உணவகங்களில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன், உணவகங்களில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.
* தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கையில் 50 விழுக்காடு அளவு மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதிக்கப்படுகிறது.
* அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
* ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.
* மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள், மற்ற இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



காலை 10 முதல் 8 மணி வரை டாஸ்மாக் செயல்படும்

கடந்த மாதம் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட போது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளின் நேரம் கூடுதலாக 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது மாலை 5 மணி வரை இருந்த கடையின் நேரம் இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் கூடுதலாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு இரவு 7 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் இனி இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பஸ் போக்குவரத்து

மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

இ-பாஸ் முறை


வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும், மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

Tags : Tamil Nadu ,corona Virus LockDown , corona Virus,LockDown ,July 31,Tamilnadu
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...