×

சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு போலீசார் பதிந்த எப்ஐஆரில் முரண்பாடு: சிசிடிவி பதிவு வெளியானதால் பரபரப்பு

சாத்தான்குளம்:  தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பான விவகாரத்தில் பென்னிக்ஸ் நடத்தி வந்த செல்போன் கடை அருகில் உள்ள ஒரு கடையில் பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகள் நேற்று வெளியானது. இதில் இடம் பெற்றுள்ள காட்சிகள் காவல்துறையினர் எப்ஐஆரில் அளித்த தகவலுக்கு நேர்மாறாக உள்ளது, இந்த காட்சியில் செல்போன் கடை அருகே ஒரு காவல் துறை வாகனம் வந்து நிற்பது பதிவாகி உள்ளது. இரு காவலர்கள் பென்னிக்ஸ் கடை முன் வந்து அங்கு நின்றுக் கொண்டிருக்கும் ஜெயராஜ் உடன் பேசுகின்றனர். அப்போது அங்கு எந்த வாக்குவாதமும் எதுவும் நடக்கவில்லை. காவலர்கள் தங்கள் வாகனத்துக்கு நடந்து செல்கின்றனர். ஒரு நிமிடம் கழித்து போலீசார் அழைத்ததால் கடை வாசலில் நின்று கொண்டிருக்கும் போலீஸ் வாகனத்தை நோக்கி ஜெயராஜ் நடந்து செல்கிறார்.

சுமார் ஒன்றரை நிமிடம் கழித்து பென்னிக்ஸ் நண்பரான ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவசரமாகக் கடைக்குள் நுழைகிறார். இதையடுத்து பென்னிக்ஸ் மற்றும் அவரது நண்பர் ஒருவர் இருவரும் கடையை விட்டு வெளியே வந்து அந்த காவல்துறை வாகனத்தை நோக்கிச் சென்று ஏதோ பேசுகின்றனர். அதன் பிறகு ஜெயராஜை அழைத்துக் கொண்டு காவல்துறை வாகனம் சென்று விட பென்னிக்ஸ் நண்பருடன் பைக்கில் காவல் நிலையம் புறப்படுகிறார்.
இந்த வீடியோ பதிவுகள் காவல்துறையின் எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டதற்கு நேர் மாறாக உள்ளன. எப்ஐஆரில், ‘ஜூன் 19 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு பென்னிக்ஸ் மொபைல் கடை ஊரடங்கு நேரத்துக்கு பிறகும் திறந்திருந்தது. கடை வாயிலில் பென்னிக்ஸ், ஜெயராஜ் மற்றும் சிலர் நின்றுக் கொண்டு இருந்தனர்.

அவர்களை கலைந்து போகச் சொன்னதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றனர். ஆனால் இந்த தந்தை மகன் இருவரும் கலைந்து போக மறுத்துத் தகாத வார்த்தைகளில் காவலர்களைத் திட்டி தரையில் உருண்டு புரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டது.’’ என பதியப்பட்டுள்ளது. இதன் மூலம் எப்ஐஆரில் முரண்பாடு இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் வேண்டும் என்றே தந்தை, மகன் மீது பொய்யான வழக்குபதிவு செய்து அவர்களை  துன்புறுத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.

Tags : death ,FIR , Sathankulam ,Father, son Dead case, police Playing, FIR
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...