×

உயர் அதிகாரிகள் உத்தரவை மதிக்காமல் அராஜகம்; மாத்திரை வாங்க சென்றவரை தாக்கி தரதரவென இழுத்து சென்ற போலீசார்: தொடரும் அத்துமீறல்

அண்ணாநகர்: தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்களிடம் போலீசார் மரியாதையுடன் நடந்து கொள்ளும்படி சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், அத்தியவாசிய பொருட்களை வாங்க வரும் மக்களை போலீசார் அடிக்கவோ, மிரட்டவோ கூடாது. கனிவாக பேச வேண்டும். போலீசார் யாராவது   துன்புறுத்தினால் மக்கள் உடனே 100, 112 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம், என குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகள் அறிவுரை வழங்கிய மறுநாளே அதை காற்றில் பறக்கவிடும் சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் சதாம் உசேன் (23). இவர், நேற்று காலை 9.30 மணிக்கு அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் உள்ள மருந்துக்கடையில் மாத்திரை வாங்க இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வாகன சோதனையில் ஈடுபட்ட அண்ணாநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கண்ணன்,  சதாம் உசேனை மடக்கியபோது, ‘‘மாத்திரை வாங்க செல்வதாக அவர் கூறியுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை, என கூறிய ஆய்வாளர், சதாம் உசேனின் வாகனத்தை பறிமுதல் செய்தார்.

அதற்கு சதாம் உசேன், ‘‘மாத்திரை வாங்க கூட வெளியே வர கூடதா’’ என ஆய்வாளரிடம் கேள்வி எழுப்பினார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு திரண்ட பொதுமக்கள், ஆய்வாளரை சுற்றிவளைத்து கேள்வி எழுப்பியதால், உடனே அவர் செல்போனில் தொடர்புகொண்டு சுமார் 30 போலீசாரை அங்கு வரவழைத்தார். அவர்கள், சதாம் உசேனை சரமாரியாக தாக்கி தரதரவேன இழுத்து சென்று, வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றினார். இதை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இது வைரலாக பரவியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அரசு அனுமதித்துள்ள நேரத்தில் கூட அத்தியவாசிய பொருட்கள் வாங்க செல்பவர்களை போலீசார் அனுமதிப்பது இல்லை. பொதுமக்களிடம் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும், என போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும், அதை மதிக்காமல் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : buyer ,chennai AnnaNagar , AnnaNagar,Manhandled ,Person , Chennai Police
× RELATED டிரைவர் மீது கார் ஏற்றி கொல்ல முயற்சி...