×

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்தது

சென்னை: சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது மார்ச் மாதம் இறுதியில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த மாதம் 7ம் தேதி தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில், ஒரு லிட்டர் பெட்ரோல், 76.07 ரூபாய்க்கும், டீசல், 68.74 ரூபாய்க்கும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில், நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83.59 ரூபாயாக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் 77.61 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று, பெட்ரோல் விலையில் 4 காசுகள் உயர்ந்து 83.63 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து 77.72 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Petrol,Diesel ,Further
× RELATED அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு