×

3 ஊழியர்களுக்கு கொரோனா எதிரொலி: நாமக்கல் நகராட்சி அலுவலகம் மூடல்

நாமக்கல்: நாமக்கல் நகராட்சியில் 3 ஊழியர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதால், அலுவலகம் மூடப்பட்டது. நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் நகராட்சி அலுவலகம் அருகில், தினசரி மற்றும் வாரச்சந்தை இயங்கி வருகிறது.  இங்கு 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  நேற்று முன்தினம் சந்தை வியாபாரிகள், நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், நகராட்சி தற்காலிக பணியாளர் கள் 3 பேர், சந்தை வியாபாரிகள் 3 பேர் என 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 6 பேரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள  கொரோனா வார்டில் நேற்று இரவு அனுமதிக்கப் பட்டனர்.

காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் இரவோடு, இரவாக தினசரி சந்தையை நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா மூடினார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சந்தையில் ஒரு வியாபாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் சுமார் 20 நாட்கள் சந்தை மூடப்பட்டது. தற்போது 2வது முறையாக மூடப்பட்டுள்ளது. இன்று காலை நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 12 சுகாதாரப் பணியாளர்கள் கவசஉடை அணிந்து, இந்த பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர்பாஷா கூறுகையில், இன்றும் (28ம் தேதி), நாளையும் (29ம்தேதி) நகராட்சி அலுவலகம் இயங்காது.

அலுவலகத்தில் பணிபுரியும் 50 அலுவலர்களுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப் படுகிறது. அலுவலகம் வர யாருக்கும் அனுமதியில்லை. பொதுமக்கள் இரண்டு நாட்கள் நகராட்சி அலுவலகம் வர வேண்டாம். இனி புதன்கிழமை தான்  அலுவலகம் செயல்படும். தினமும் 4 முறை நகராட்சி அலுவலகத்தின் அனைத்து பகுதியிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படும் என்றார். நகராட்சி தற்காலிக பணியாளர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தால், நாமக்கல் நகராட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலகத்துக்கு வந்து சென்றவர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.



Tags : Corona ,closure ,Namakkal Municipal Office ,Namakkal Municipal Office of Closure , 3 Employee, Corona, Namakkal Municipal Office, Closure
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...