×

கொரோனா தனிமை முகாமில் மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை; போதிய உணவு, குடிநீர் இல்லை என புகார்: மதுரையில் பரபரப்பு

திருப்பரங்குன்றம்: உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை எனக் கூறி கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் மாடியிலிருந்து குதித்த முதியவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைகள் நிரம்பி விட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தனிமை முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனிமை முகாம்களில் குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதி சரிவர செய்து தரப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும் உரிய மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 350க்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாமில் தங்கியிருந்த பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்த 60 வயது முதியவர் போதிய உணவு, குடிநீர் வசதி செய்து தரவில்லை என்று அதிகாரிகளிடம் அடிக்கடி புகார் செய்துள்ளார். இருப்பினும் நடவடிக்கை இல்லாததால் விரக்தியடைந்த அவர், நேற்று மாலை முதல் மாடியில் இருந்து குதித்தார்.

இதில் அவரது வலது கால் முறிந்தது. மேலும் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர் என்பதால் அவரை உடனடியாக மீட்க யாரும் முன்வரவில்லை. முகாமில் இருந்த மற்ற நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். ஆனால் 1 மணி நேரமாக ஆம்புலன்ஸ் வரவில்லை. தொடர்ந்து முகாமில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணனை தொடர்பு கொண்டு கூறினர். மதுரை மாவட்ட கொரானா தடுப்பு சிறப்பு அதிகாரி சந்திரமோகனை தொடர்பு கொண்டு எம்எல்ஏ பேசியதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு முதியவர் கொண்டு செல்லப்பட்டார்.

தகவலறிந்து துணை கலெக்டர் பிரியங்கா, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களை முகாமில் இருந்த நோயாளிகள் முற்றுகையிட்டு, இங்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. மேலும் உரிய சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதில்லை’ என்று சரமாரியாக புகார் தெரிவித்தனர். மேலும் தங்களை வேறு முகாமிற்கு மாற்ற வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் வழங்காததால் அவர்கள் மேலும் விரக்தியடைந்த நிலையில் உள்ளனர். முகாமில் தங்கியிருந்த முதியவர், இந்த மன அழுத்தத்தால் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : suicide ,isolation camp ,Corona , Corona Solitude Camp, Elderly, Suicide, Madurai
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...