×

அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்களின் கொரோனா நிவாரண நிதியை திருப்பி வழங்க முதல்வர் உத்தரவு

சென்னை: அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் தமிழக காவல்துறை சார்பில் வழங்கிய கொரோனா நிவாரண நிதியை திருப்பி வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள போதிய அளவு நிதி இல்லாததால், கொரோனா வைரஸ் பாதிப்பை பேரிடர் காலமாக முதல்வர் சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏழை, எளிய மக்களை இன்னலில் இருந்து மீட்க ரூ.10 லட்சத்திற்கு மேல் நிதி வழங்குவோரின் விவரங்கள் பத்திரிக்கையில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80(G)-ன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என முதல்வர் பழனிசாமி தெரிவித்து இருந்தார். இதன்படி தொழிலதிபர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் பல்வேறு தரப்பினர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களது நிதியை வழங்கினார்கள்.

இதனை தொடர்ந்து கொரனா தடுப்பு பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,காவல்துறையினர் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்கினர். இந்த நிலையில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஓய்வில்லாமல் உழைத்து வரும் காவலர்களுக்கு அவர்கள் வழங்கிய நிதியை திருப்பி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவலர்களிடம் இருந்து பெறப்பட்ட ஒரு நாள் ஊதியமான 8 கோடியே 41 லட்ச ரூபாய் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்படுகிறது.

Tags : Chief Minister, orders, repayment ,Corona, Relief ,Fund
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...