×

உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

டெல்லி: உலகளாவிய வாடிக்கையாளர்களின் சேவைக்காக இந்தியாவில் 20 ஆயிரம் பேரை பணியமர்த்த உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அமேசான் நிறுவனம் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இணையதளத்தில் பொருள் விற்பனை உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் இணையதளத்தில் பொருள் விற்பனை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர் சேவையை வலுப்படுத்தும் வகையில், வேலை வாய்ப்பை வழங்கவுள்ளது.

இந்தியாவில் ஹைதராபாத், புனே, கோவை, நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 13 நகரங்களில் 6 மாத காலத்திற்கு தற்காலிகமாக 20 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு வீட்டிலிருந்தே பணி ஆற்றும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. இவர்கள் 12ம் வகுப்பு படித்திருப்பதுடன் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய ஏதாவது ஒரு மொழியை சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை பார்ப்பவர்களின் இடம் மற்றும் அவர்களது பொறுப்பு ஆகியவற்றை பொறுத்து 15,000 முதல் 20,000 வரையில் மாத சம்பளம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வேலையை இழந்துள்ளனர். தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்தில் பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

Tags : Amazon , Customers, India, Employment, Amazon
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...