×

தனிமைபடுத்தப்பட்ட கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதால் சுற்றுவட்டார மக்கள் பீதி: மீன்பிடிக்கவும் மதுக்கடைகளுக்கும் வருகை

புதுக்கடை,: குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 24  இடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்  புதுக்கடை அருகே தூத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் மட்டும் நேற்று முன்தின கணக்குப்படி 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்தூர்  மண்டலத்துக்குட்பட்ட இரயுமன்துறை, பூத்துறை, சின்னத்துறை, இரவிபுத்தன் துறை, வள்ளவிளை உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களில் சுய ஊரடங்கு  கடைபிடிக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அந்தப்பகுதிகளில் சிலர்  சுய  ஊரடங்கு கடைபிடிக்காமல் கடலுக்கு மீன்பிடிக்க தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பகுதிக்கு வந்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக ஆற்றின்  மறுகரை பகுதியான இரயுமன்துறை, மஞ்சத்தோப்பு, சின்னத்துறை, கலிங்கராஜபுரம், நித்திரவிளை, மாம்பழஞ்சி போன்ற பகுதிகள் வழியாக பரக்காணி ஆற்று கடவு  பகுதியில்  வள்ளம் மற்றும் ஆட்டோக்களில் கார்களில் வந்து செல்கின்றனர்.

இதனால் பீதியடைந்த பரக்காணி பகுதிமக்கள் புகார் செய்ததின் பேரில் பைங்குளம் ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, பரக்காணியில் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த தடுப்பு வேலியை ஒரு சிலரின் சுய லாபத்திற்காக அகற்றும்  முயற்சி அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக  கணபதியான் கடவு பாலம் வந்து,  பார்த்திபபுரம் கோவில் வழியாக பைங்குளம் சென்று குறுக்கு வழியாக பரக்காணி பகுதிக்கு தினமும் நூற்று    கணக்கில் கேரளா பதிவெண்  வாகனங்கள்  செல்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போது  அமைக்கப்பட்டுள்ள தடுப்பு  வேலியின்  மறுபுறத்தில் நிறுத்தி விட்டு, உள்ளே வந்து செல்வதாக புகார்கள்  எழுந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்று பகுதிகளில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், தூத்தூர் சுற்று வட்டார பகுதி குடிமகன்கள் ஆட்டோ, மற்றும் வாகனங்களில் புதுக்கடை பகுதியில் தினமும் குவிந்து வருகின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் செய்தும் உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே தொற்று பாதித்த பகுதி மக்கள் வெளி பகுதிகளுக்கு வந்து  செல்ல முடியாத  படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : villages ,residents , Isolated beach village, panic, fishing, bartender
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை