×

நாகர்கோவிலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்க புதிய கட்டிடம்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்படுகிறது

நாகர்கோவில்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக இருப்பு வைக்க கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட இருக்கிறது.
குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள், 1 பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல்களில் பயன்படுத்தப்படுகின்ற மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலக வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வேளையில் அதிகாரிகள் மின்னணு இயந்திரங்களை ஆய்வு செய்யவும், சரிபார்க்கவும், தொகுதி வாரியாக இயந்திரங்களை பிரித்து அனுப்பவும் பூதப்பாண்டிக்கு செல்ல வேண்டும். மேலும் பெல் நிறுவன பொறியாளர்கள் வருகை தந்தாலும் பூதப்பாண்டி சென்றுதான் சரிபார்க்க வேண்டும் என்ற நிலை இருந்து வருகிறது.

இங்கு தற்போது 2340 கட்டுப்பாட்டு கருவிகள், 4300 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2340 விவிபேட்கள் போன்றவை  வைக்கப்பட்டுள்ளன. இங்கு போதிய இடவசதி இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை இருப்பு வைக்கும் ஸ்ட்ராங்க் ரூம் ஒன்றை நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு கட்டிடம் அருகே உள்ள காலியிடத்தில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் உள்ள மரங்களை வெட்டி அப்புறத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் இங்கு கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பசுமையை இழக்கும் வளாகம்
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பழமைவாய்ந்த மரங்கள் நிறைந்த பகுதியாக விளங்கி வந்தது. பல்வேறு அலுவலகங்களில் கட்டுமான பணிகள் தொடங்கும்போது அந்த பகுதியில் உள்ள மரங்களை முதலில் வெட்டி அப்புறப்படுத்திய பின்னரே பணிகள் தொடங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இருப்பு வைப்பதற்காக கட்டிடம் கட்ட மரங்கள் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஏற்கனவே கலெக்டர் அலுவலக முன்பகுதியில் உள்ள மரங்கள் பல விரிவாக்க பணிகளுக்காக வெட்டிஅப்புறப்படுத்தப்பட்டிருந்தது. கூடுதல் கலெக்டர் அலுவலக கட்டிடம் கட்டவும் பல மரங்கள் அகற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : building ,office building ,Nagercoil ,Collector , In Nagercoil, electronic polling, new building
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...