×

கல்வி கற்பிப்பதில் பள்ளிக்கு பள்ளி வேறுபாடு; பாடாய்படுத்தும் ஆன்லைன் வகுப்புகள்: அரசின் ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் எப்போது?

நாகர்கோவில்: தமிழகத்தில் ஒருமாத காலமாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் நிலையில் பள்ளிக்கு பள்ளி, ஆசியருக்கு ஆசிரியர் இதில் வேறுபாடு இருப்பதால், இதனை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக 24.70 கோடி இந்திய மாணவ மாணவியரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி கோடை விடுமுறைக்கு பின்னர் திறக்கப்பட வேண்டிய பள்ளிகள் கொரோனா தொற்று காரணமாக திறக்கப்படவில்லை. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  பள்ளிகள் மீண்டும் திறக்கும் நாளில் இவை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் தங்களது மாணவர் சேர்க்கை பணிகளையும் நிறைவு செய்துள்ளன.

மேலும் பல்வேறு அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. சில பள்ளிகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்தும் வகுப்புகள் நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆன்லைன் வகுப்புகளுக்கு வீடுகளில் இணையவசதியுடன் கூடிய மொபைல் போன் அல்லது லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவற்றின் தேவையுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்ளும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் பல்வேறு இன்னல்களை தற்போது சந்திக்க தொடங்கியுள்ளனர். ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் செல்போன்களுடன் அமர்ந்திருக்கும் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை போன்று எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை பெற்றோர் அமர்ந்து கற்றறிந்து தங்கள் குழந்தைகளுக்கு போதிக்க வேண்டியுள்ளது.

ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், குறிப்பிட்ட பாட பகுதிகள் சார்ந்த வீடியோக்களின் யு-டியூப் லிங்குகளை அனுப்பி வைக்கின்றனர். அந்த லிங்குகள் வழியாக நுழைகின்றவர்களுக்கு யு-டியூபில் உள்ள வேறு படகாட்சிகள், விளம்பரங்கள் போன்றவை காட்சிகளாக வந்து விழுகின்றன. ஆபாசம் கலந்த காட்சிகளும் வந்து விழுகின்றன. இதனால் மாணவர்கள் பாடங்களை கவனிப்பதற்கு பதில் அந்த படக்காட்சிகளை காண்பதில் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி வருகின்றனர். வகுப்புகள் நடைபெறாத வேளையில் இவற்றை தேடத்தொடங்குகின்றனர். சில பள்ளிகளில் வகுப்பறைகளில் நடைபெறுவது போன்று ஆன்லைனில் நேரடியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. கரும்பலகையில் எழுதி விளக்குவதை மாணவர்கள் அப்படியே ஆன்லைனில் கவனிக்கின்றனர். ஒரு சில பள்ளிகளில் பெற்றோரின் செல்போன் எண்களுடன் வாட்ஸ் ஆப் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு பாடங்களை குறிப்புகளாக எழுதி போட்டோ எடுத்து வழங்குகின்றனர்.

அதனை பதிவிறக்கம் செய்து மாணவர்கள் எழுதி தாங்களாகவே கற்றுக்கொள்கின்றனர். அந்த பாடங்கள் தொடர்பாக எழும் சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு தெரிந்து கொள்ள இயலாத வகையில் வாட்ஸ் ஆப் குழுக்கள் லாக் செய்யப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை கேட்க முடியாமலும், ஆசிரியர்களுடன் கலந்துரையாட இயலாமலும் உள்ளதால் அவர்களுக்கு மன அழுத்தமும் ஏற்பட தொடங்கியுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மே மாதமே வகுப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. பள்ளிகளுக்கு வருகின்ற மாணவ மாணவியருக்கு செல்போன் வழங்க கூடாது என்று ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகங்களும் கூறி வந்த நிலையில் அதே செல்போன்களை மாணவர்களுக்கு பெற்றோரே கையில் முழுமையாக திணிக்க வேண்டிய நிலைக்கு சூழல் மாறியுள்ளது. இது மிகப்பெரும் ஆபத்தையும் ஏற்படுத்த தொடங்கியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க ஆன்லைன் வகுப்பில் செல்போன் இல்லாததால் மாணவர் தற்கொலை, ஆன்லைன் வகுப்புக்கு கொடுத்த செல்போனை பயன்படுத்தி ஆபாச படம் பார்த்து சிறுமியை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய மாணவர்கள் என்பது போன்ற செய்திகளும் வரத்தொடங்கியுள்ளன.

மாணவர்களும் செல்போனும் இணைந்துவிட்டால் அதில் இருந்து அவர்களை உளவியல் ரீதியாக திரும்ப பெறுவது பெற்றோருக்கு பெரும் சவாலாக மாறிவிடும். அது அவர்களின் எதிர்கால கல்வியையும் பாதிக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.  இதனால் கர்நாடகா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதை தடுக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். எனினும் ஆன்லைன் பாட திட்டங்களை முறைப்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே தமிழகத்தில் ஆன்லைன் பாட திட்டம் தொடர்பாக உரிய வழிகாட்டி நெறிமுறைகளை அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

அரசு இணையதளத்தில் பாடங்கள்
மாணவர்கள் நலன்கருதி வீட்டில் இருந்தே பாடங்களை கற்கும் வகையில் தமிழக அரசால் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களை கற்றுக்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பாட திட்டம் குறைப்பு?
பள்ளிகள் திறப்பதற்கு தாமதம் ஆகி வருகின்ற நிலையில் பாட திட்டத்தை குறைப்பதற்கு 18 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என 14 அரசு அலுவலர்கள், 4 கல்வியாளர்கள் என்று மொத்தம் 18 பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு எப்போது அறிக்கை அளிக்கும் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. அதே வேளையில் பல பள்ளிகளில் அதற்குள் இரண்டு, மூன்று பாடங்கள் வரை மாணவர்களுக்கு நடத்தி முடித்துள்ளன.

கல்வி தொலைக்காட்சி
கேரளாவில் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் போதிக்கின்றனர். அனைத்து வகுப்புகளுக்கும் இது நடைபெறுகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் பொதிகை மற்றும் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு பாடம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். பள்ளிகள் திறக்க முடியாத சூழலில் ஆன்லைன் கல்விக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன என்றும் கூறியிருந்தார். தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வீடியோக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கற்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.

கல்வி கட்டணம் வசூல்
மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தினால் மட்டுமே கல்வி கட்டணத்தை பெற்றோரிடம் இருந்து வசூல் செய்ய முடியும் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களுக்கு பெயரளவிற்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் பள்ளிகளும் உள்ளன. இதனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள மாணவர்கள் மட்டுமே முழுமையாக கற்று தேற இயலும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தி முதல் பருவத்திற்கான கல்வி கட்டணத்தையும் வசூலிக்க தொடங்கியுள்ளன.

ஸ்மார்ட்போன் இல்லாத பெற்றோர்
தமிழகத்தில் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன் இல்லாத பெற்றோர் 50 சதவீதம் வரை இருப்பதாக கூறப்படுகிறது. வீட்டில் ஒரு ஸ்மார்ட் போன் மட்டும் இருக்கும்போது அதனை பெற்றோர் கைவசம் வைத்திருக்கின்றனர். அவர்கள் பணிக்கு சென்று திரும்பி அதன் பிறகு அதில் உள்ள பாடங்களை இரவு நேரங்களில் மாணவர்களுக்கு விளக்குவது என்பதும் இயலாத ஒன்றாக மாறியுள்ளது. மேலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படாமலும் கூடவே பெற்றோரும் அமர்ந்து முழுமையாக ஆன்லைன் வகுப்பில் ஈடுபட வேண்டிய நிலையும் உள்ளது. இதுபோன்ற பிரச்னைகள் பல குடும்பங்களில் இருந்து வருகிறது.

Tags : School , Education, school, diversity, online classes
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி