×

மன்னார்குடி நகராட்சி 33வது வார்டில் குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம்: தொற்று நோய் பரவும் அபாயம்

மன்னார்குடி: மன்னார்குடி ஆர்பி சிவம் நகரில் குடியிருப்பு பகுதி அருகே கோழி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரம் 33வது வார்டுக்குட்பட்ட ஆர்பி சிவம் நகர் மற்றும் பாரி நகரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் அதன் அருகில் புல் வளர்க்கும் மையமும் உள்ளது.

இந்நிலையில், மன்னார்குடி நகரில் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்படும் கோழிக் கழிவுகள் அனைத்தும் ஆர்பி சிவம் நகரில் உள்ள புல் வளர்க்கும் மையம் அருகில் பொது வெளியில் கொட்டப்படுகிறது. மேலும் அருகே பாமணியாற்றின் கரையோரத்தில் இருக்கும் 5 இடுகாடுகளுக்கு செல்லும் வழியிலும் கோழிக்கழிவுகள் கொட்டப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து, ஆர்பி சிவம் நகர் மற்றும் பாரி நகர் நலச்சங்கம் சார்பில் மன்னார்குடி நகராட்சி ஆணையர் திருமலைவாசனிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் பொது வெளியில் கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : area ,Mannargudi Municipality ,Ward ,Mannargudi Municipal , Mannargudi municipality, poultry waste, stink
× RELATED வாட்டி வதைக்கும்...