×

கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்வது எப்படி?

நன்றி குங்குமம் தோழி

கொரோனா மேலும் பல மாதங்கள் நம்முடன் தான் இருக்கும் என நம் அரசும், இந்தியச் சுகாதாரத் துறையும் தெரிவித்துவிட்டன. இந்த கொரோனா தொற்று நோயின் விகிதம் 2.66 ஆகும். அதாவது, ஒரு கொரோனா நோயாளியிடமிருந்து  இரண்டு முதல் மூன்று பேருக்கு இந்த நோய்த்தொற்று பரவும் வாய்ப்புள்ளது. இப்போது நாம் ஊரடங்கில் இருப்பதால் இந்த தொற்று விகிதம் 1.5ஆகக் குறைந்து இருக்கிறது.

ஆனால் ஊரடங்கு முடிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் போது, இதன் தொற்று விகிதம் சில நாட்களுக்கு தீவிரமாகலாம் என மருத்துவர்கள் கணிக்கின்றனர். அதனால் ஊரடங்கு முடிவதால் மட்டும் மக்கள் கொரோனாவுடனான போராட்டத்தை முடித்துக்கொள்ள முடியாது. எப்போதும் போல, ஊரடங்கிற்குப் பின்  சில கட்டாய விதிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே இந்த நோயிலிருந்து முழு விடுதலையை பெற முடியும்.

கொரோனாவுடன் வாழ எப்படி பழகிக்கொள்வது என குழந்தை நல மருத்துவர், தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர் நடராஜ் பழனியப்பன், சில டிப்ஸ்கள் கொடுக்கிறார். இவர் மருத்துவ துறையில் பதினைந்து ஆண்டுகள் அனுபவம் கொண்டவர், ரெயின்போ சில்ட்ரென்ட்ஸ் மருத்துவமனையில், பி.ஐ.சி.யு மற்றும் ஈ.ஆர் துறையில் மூத்த ஆலோசகராகவும் இருக்கிறார்.

‘‘நம் அடிப்படை பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களை நாம் ஏற்படுத்திக்கொண்டால்தான் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள முடியும்’’ என்ற அறிவுறுத்தலுடன் தொடர்ந்த மருத்துவர், ‘‘ஊரடங்கு முடிந்த பின்னும், தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வருவதை நிறுத்த வேண்டும். எப்போதும் போல காய்கறிகளை இரண்டு மூன்று நாட்களுக்கு சேர்த்தே வாங்கிக்கொள்ளவேண்டும்.

சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தினமும் சாப்பிடும் மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டு, அடிக்கடி மருந்தகம் போவதை குறைத்துக்கொள்ள வேண்டும். பல மருத்துவமனைகளில் இப்போது தொலைபேசியிலேயே நோய்க்கான சிகிச்சை முறை தெரிவிக்கப்படுகிறது.அதனால் சாதாரண காய்ச்சல் மற்றும் வழக்கமான சோதனைகளை முடிந்த வரையில் வீடியோ அழைப்புகள் மூலமாகவோ அல்லது தொலைபேசியிலோ மருத்துவர்களிடம் ஆலோசனைகள் பெறலாம்.

குடும்பத்திலிருந்து ஆரோக்கியமான, எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுத்து, அவரை வெளியில் தேவையான பொருட்கள் வாங்கி வர அனுப்பலாம். இதன் மூலம் அவர் கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகமாகி, தன் குடும்பத்தையும் காக்க முடியும்.  

மேலும், வீட்டில்  ஏ.சியை தவிர்த்து ஜன்னல்களை திறந்து வைத்து நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வெளியே சென்று வரும்போது, வீட்டிற்கு வெளியே குழாயிலோ அல்லது ஒரு பக்கெட்டை வைத்து, கை கால்களை நன்றாக கழுவிய பின் வீட்டிற்குள் வரவேண்டும்.  வீட்டிற்குள் வந்ததும் துணிகளை சோப்பு தண்ணீரில் சில நிமிடங்கள் ஊறவைத்து, பின் மிதமான வெந்நீரில் துவைக்க வேண்டும்.

அடுத்து தலை குளிக்கவும் வேண்டும். வெளியிலிருந்து வாங்கி வரும் பொருட்களை தனியாக 4-5 மணி நேரம், யாரும் தொடாமல் அதே பைகளில் வைத்திருக்க வேண்டும். காய்கறிகளை வெந்நீரில் கழுவியும் எடுக்கலாம். பிற பொருட்களை, அதன் கவர்களிலிருந்து பிரித்து, வீட்டிலிருக்கும் பாத்திரங்களில் அல்லது பைகளில் மாற்றிக்கொள்ள வேண்டும்.  

அடுத்ததாக வெளியில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வதை முடிந்தவரையில் தவிர்த்து, வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. ஆனால் ஹோட்டலில் வாங்கும் நிலைமை வரும் போது. உணவை அதன் பாக்கெட்டுகளில் இருந்து உடனே பிரித்து, அந்த உறைகளைக் குப்பைத்தொட்டியில் போட்டுக் கைகழுவ வேண்டும். பின் உணவை வீட்டு பாத்திரத்தில் மாற்றி, ஒரு முறை மீண்டும் அடுப்பில் வைத்து சூடாக்கி பின் சாப்பிடலாம். அதே போல, கொரோனா சமயத்தில் சைவம், அசைவம் என எல்லா உணவையும் சாப்பிடலாம். அவை நன்றாக சுத்தம் செய்து சமைத்திருக்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்குஅடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி போன்ற அனைவருக்கும் பொருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகளை தாண்டி, கர்ப்பிணிப் பெண்கள் சில சிறப்பு வழிமுறைகளை இந்த நேரத்தில் பின்பற்ற வேண்டும். முதலில் உடல் ஆரோக்கியத்திற்குப் புரதம் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். வைட்டமின், ஜிங்க் (zinc) அதிகம் உள்ள உணவுகளையும் டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடிக்கடி மருத்துவமனை செல்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் அதே சமயம் ஏதாவது சிக்கல் அல்லது ஆபத்து இருக்கும் கர்ப்பிணிப் பெண்கள் மட்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி பரிசோதனைகளுக்குத் தவறாமல் செல்ல வேண்டும். இது தவிர, சாதாரணமாக எழும் சந்தேகங்களுக்கு தொலைபேசியிலேயே தெளிவு பெறலாம்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு உடற் பயிற்சி அவசியம். வீட்டிலேயே யோகா போன்ற சில பயிற்சிகள் தினமும் செய்யலாம். இடுப்பு தசைக்கு உடற்பயிற்சியும் இந்த நேரம் மிக அவசியமானது. குழந்தை பிறக்கும் போது மிகவும் உதவியாய் இருக்கும். உடற்பயிற்சி குறித்த தகவல்களை ஆன்லைனில் பார்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் செய்யலாம்.

வீட்டில், மாடிப் படிகளை சில முறை ஏறி இறங்கியும், சாப்பிடும் போது தரையில் அமர்ந்து கால்களை மடக்கி சம்மணம் இட்டுச் சாப்பிடுவதும் இடுப்பு தசைக்கு வலு சேர்க்கும். வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளை மிகவும் நெருக்கமான குடும்பத்தினருடன் மட்டும் கொண்டாடுவதே உகந்தது.

குழந்தைப் பிறந்ததும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கக் கூடாது. அவர்களுக்குத் தெரியாமல் இறுக்கமாக மாஸ்க் அணிவித்து விட்டால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அதைச் சொல்லக் கூட முடியாமல் குழந்தைகள் சிரமப்படுவார்கள். இதனால் சிறு குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிக்கவே கூடாது. மேலும் எப்போதும் போல அனைத்து தடுப்பூசிகளையும் தாமதிக்காமல் குழந்தை களுக்குக் கொடுக்க வேண்டும்.  

குழந்தைகள் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, லேசான வயிற்று வலி போன்ற சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் மருத்துவமனைக்கு செல்வதைத் தவிர்த்து தொலைபேசியிலே ஆலோசனைகளை பின்பற்றலாம். மூச்சுத் திணறல், கை, கால்கள்  குளிர்ச்சி அடைதல், 6 மணி நேரத்திற்கும் மேலாக சாப்பாடு வேண்டாம் என அடம்பிடித்தல் போன்ற அறிகுறிகள் ஆபத்தானவை. இந்த சமயம் பெற்றோர்கள், நேராக மருத்துவமனைக்கு செல்வதே சிறந்தது.

வேலையிடத்தில் எப்படி இருக்க வேண்டும்?

வீட்டிலிருந்தே வேலை செய்யமுடியும் என்ற சூழ்நிலையில், அலுவலகத்திற்குப் போகாமல் வீட்டிலிருந்து வேலை செய்வதே சிறந்தது. இதனால் அலுவலகத்திற்கு வந்தால்தான் வேலை செய்ய முடியும் என்ற நிர்பந்தத்தில் இருக்கும் சக பணியாளர்களுக்கு, நோய் தொற்று விகிதம் அதிகமாகாமல் தடுக்கமுடியும். நிச்சயம் அலுவலகம் வர வேண்டும் என்ற சூழலில், வாசலிலேயே ஒவ்வொருவருக்கும் கை கழுவும் வசதியுடன், உடல் வெப்பநிலையை சோதித்தபின் அனுமதி வழங்கவேண்டும். காய்ச்சல் இருப்பவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்பி அங்கிருந்தபடியே வேலையைத் தொடரச் செய்யலாம், அவர்கள் தங்கள் உடல்நிலையை கவனித்து, சரியானதும் அலுவலகம் வரலாம்.  

அலுவலகத்தில் மறக்காமல் சமூக இடைவெளி, கை கழுவுதல், தும்பும் போதும் இரும்பும் போதும் துணி அல்லது முழங்கையை பயன்படுத்துதல் போன்ற அடிப்படை சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். ஊழியர்களை சுழற்சி முறையில் அலுவலகம் வரவைக்கலாம். ஊழியர்கள் இரண்டு மீட்டர் இடைவெளியிலிருந்துதான் வேலை செய்ய வேண்டும். அலுவலகத்தில் சில மீட்டர் இடைவெளிகளில் ஹாண்ட் சானிடைசர்கள் வைக்க வேண்டும். சக ஊழியரை நேராக சந்தித்து பேசுவதைத் தவிர்த்து தொலைபேசி, வாட்ஸ்-அப் பயன்படுத்தி உரையாடலாம்.

தவிர்க்க முடியாத முக்கியமான சந்திப்புகள் என்றால், அவசியமான உறுப்பினர்களை மட்டுமே அழைத்து, திறந்த வெளியில் அல்லது ஒரு பெரிய அறையில் ஏ.சி இல்லாமல், ஜன்னல்களை திறந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து 10-15 நிமிடத்திற்குள் முக்கிய ஆலோசனைகள் மட்டுமே செய்ய வேண்டும். சந்திப்பின் போது ஒன்றாக அமர்ந்து தேநீர் அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர் ஒருவருடன் 20 நிமிடங்கள் ஒரே அறையில் அவருடன் பேசிக்கொண்டிருக்கும் போது, நோய்த் தொற்றின் விகிதம் அதிகமாகும். இதனால் அலுவலகத்தில் யாரிடமும் 20 நிமிடங்களுக்கு மேல் உரையாடி, தொடர்பில் இருக்க வேண்டாம்.

அடுத்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டிய சமயம் மதிய உணவு இடைவெளியில்தான். அப்போது ஊழியர்கள் சமூக இடைவெளி, மாஸ்க் என அனைத்தையும் மறந்து நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்துவிடுவார்கள். அதனால், முடிந்த வரையில் மதிய உணவை இருக்கையில் அமர்ந்தே சாப்பிடுவது நல்லது. அல்லது அனைவரும் சுழற்சி முறையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து 20 நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும்.

பொது போக்குவரத்து தொடங்கப்பட்டாலும், அதில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பயணிப்பது கடினம்தான். அதனால் சொந்த வாகனங்களில் அல்லது தற்காலிகமாக சைக்கிளில் அலுவலகத்திற்கு செல்வது சிறந்தது. அரை மணி நேரம் நடக்கும் தூரத்தில் வசிப்பவர்கள், அலுவலகத்திற்கு நடந்தே செல்லலாம்.

அரசு பேருந்து அல்லது ரயில்கள் பயன்படுத்தும் பட்சத்தில், நெரிசலான நேரங்களைத் தவிர்த்து, அதிகாலையில் கிளம்பி, மாலை சீக்கிரமாக வீடு திரும்பலாம். இதைத்தாண்டி, மனிதவளத் துறையைச் சார்ந்த எச். ஆர் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி, அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், சுகாதாரத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

பள்ளிகளில் கடைப்பிடிக்க வேண்டியவைகொரோனா தடுப்பு விதிமுறைகளைக் குழந்தைகளுக்குப் பழக்கமாக்குவது மிகவும் கடினமான காரியம். பெரியவர்களே விதிமுறைகளை பின்பற்றாத போது, அதை குழந்தைகளிடம் எதிர்பார்ப்பது எளிதல்ல. இங்கு நம் பள்ளி வகுப்புகளில் குறைந்தது முப்பது நாற்பது மாணவர்கள் இருப்பார்கள். அங்கு சமூக இடைவெளி சாத்தியமற்றதாகிறது. அதனால் கூடுமானவரையில் வீட்டிலிருந்தே குழந்தைகளுக்கு பாடங்கள் அளிக்க வேண்டும்.

பள்ளிக்கு வர வேண்டிய சூழலில், மாணவர்களை சுழற்சி முறையில் காலை ஒரு பகுதியினரையும், மாலை ஒரு பகுதியினரையும் பள்ளிக்குள் அனுமதிக்கலாம். மாணவர்கள் வரும் போதும் போகும் போதும் கூட்ட நெருக்கடியில் சிக்காமல் இருக்கும்படி  பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு வகுப்பை இரண்டாக பிரித்து, 15 முதல் 20 மாணவர்கள் வரை இருக்க அனுமதிக்கலாம்.  

உணவு இடைவேளையும் சுழற்சி  முறையில் நிகழ்த்த வேண்டும். குழந்தை களுக்கு போது மான இடைவெளி நேரம் தேவை. மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு, அதன் விதிமுறைகளை கூறும் விதத்தில் சிறிய காணொளிகள் அமைக்கப்பட்டு காண்பிக்க வேண்டும். ஆசிரியர்களும் எப்படி கை கழுவ வேண்டும், எப்படி இரும்ப வேண்டும் போன்ற தகவல்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.

பள்ளி ஆண்டு விழா, பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டும். குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், ஆசிரியர் உடனடியாக பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அக்குழந்தையை தனிமைப்படுத்தி பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

ஊரடங்கு முடிந்ததும், உடனடியாக நாம் செய்யக்கூடாத காரியங்கள் ஊரடங்கு முடிந்து பொழுதுபோக்கு இடங்கள் திறக்கப்பட்டாலும் சில காலம் அவற்றை தவிர்ப்பதே நல்லது. அதிகம் மக்கள் கூடும் வழிபாட்டு தலங்களையும் முடிந்த வரையில் தவிர்த்து, வீட்டிலேயே சிறப்பு வழிபாடுகள் செய்துகொள்ளலாம். தேவையில்லாத பயணங்களை, சந்திப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

அடுத்த 4-5 மாதங்களுக்குப் பிறந்த நாள் கொண்டாட்டங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வதை நிச்சயமாக தவிர்க்க வேண்டும். அத்தியாவசிய தேவைப் போக, தேவையில்லாத ஷாப்பிங்கை தவிர்ப்பதும் நல்லது. மாஸ்க் இல்லாமல் வெளியே செல்லக்கூடாது. கைகள் கழுவுவதை நிறுத்தக் கூடாது. இவ்வளவு நாட்களாக நாம் பின்பற்றிய அனைத்து விதிமுறைகளையும் ஊரடங்கு முடிந்த பின்பும் வழக்கமாக்கிகொள்வதே சிறந்தது.

இந்த கொரோனா, ஒரு நாட்டிற்கான அடிப்படை தேவைகள் உணவும் மருத்துவ வசதிகளும்தான் என்பதை கற்றுக்கொடுத் திருக்கிறது. இப்போது நாம் கடைப்பிடிக்கும் கொரோனா விதிமுறைகள் அடிப்படையாகவே அனைவரும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்தான்.

வீட்டிற்குள் செல்லும் முன் கைகால்களை சுத்தம் செய்வது, இரும்பும் போது துணியோ அல்லது கை களையோ பயன்படுத்துவது போன்ற அத்தியாவசிய பழக்க வழக்கங்களை கொரோனாவிற்கு பின்பும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.

 மக்கள் எவற்றையெல்லாம் முக்கியம், தேவை என நினைத்தார்களோ அதெல்லாம் இந்த ஊரடங்கு நேரத்தில் துச்சமாகிவிட்டன. தினமும் பல மணி நேரம் பயணம் செய்து அலுவலகம் செல்லும் ஐ.டி ஊழியர்கள், தங்கள் கிராமத்திலிருந்தே வேலையை முடித்துவிடுகின்றனர்.

இதன் மூலம், இதுநாள் வரை பயணம் செய்ய முடியாத மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் என அனைவருமே விட்டிலிருந்தே உற்பத்தி திறன் குறையாமல் வேலை செய்ய முடியும் என்பதும் நிரூபணமாகியுள்ளது. கொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தை மறந்துபோகாமல், மாற்றங்களுடன் வாழ பழகிக்கொள்வோம்.

ஸ்வேதா கண்ணன்


Tags : Corona , How to get used to living with Corona?
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...