×

வேறு வீடியோக்களை சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புபடுத்தி பகிர்ந்தால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!!!

சென்னை: வேறு வீடியோக்களை சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தோடு தொடர்புபடுத்தி பகிர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளையும், வதந்திகளையும் மற்றும் சம்பந்தமில்லாத வீடியோ போன்றவற்றையும் ஒருசிலர் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வீடியோ பதிவு குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் 2019ம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற வீடியோ என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதனை சாத்தான்குளம் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சிலர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவலை பரப்பி வருவதும் விசாரணையில் தெரியவந்திருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள். எனவே இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினாலோ, அதேபோல தனிநபர்கள் மற்றும் சமூகவலைதள குழுக்களில் தவறான தகவல்கள், வதந்திகளை பரப்பினாலோ பதிவிடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : death ,Satan , Satanic pool, action, police, alert
× RELATED காருக்குள் கேரள தொழிலதிபர்...