×

சேதமடைந்து கிடக்கும் வரட்டாறு சாலை பழநி முருகனுக்கு தீர்த்தம் கொண்டு செல்வதில் சிக்கல்: சீரமைக்கப்படுமா?

பழநி: வரட்டாறு சாலை சேதமடைந்து கிடப்பதால் பழநி முருகனுக்கு தீர்த்தம் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலின் மூலவர் சிலை அரிய வகை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு நாளொன்றிற்கு 6 கால பூஜைகள் நடைபெறும். இதற்காக மருத்துவ நகர் பகுதியில் உள்ள வரட்டாற்றில் இருந்து பாரம்பரியமாக தீர்த்தம் எடுத்து செல்லப்படுகிறது. இதற்காக பழநி கோயிலில் 64 அயன்மிராஸ் பண்டாரங்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தீர்த்தம் மலைக்கு கொண்டு செல்ல தெற்கு கிரி வீதியில் இருந்து பிரத்யேக திருமஞ்சனபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரட்டாற்றில் இருந்து கிரிவீதிக்கு வரும் சாலை சேதமடைந்துள்ளது. சாலைகள் கற்களால் பரப்பி குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அபிஷேக தீர்த்தம் எடுத்து வருபவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் மருத்துவ நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் கூறுகையில், வரட்டாறு பாதை சேதமடைந்திருப்பதால் தீர்த்தம் எடுத்து நடந்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மருத்துவ நகர் பகுதியில் 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். சாலை கடுமையாக சேதமடைந்திருப்பதால் பைக் உள்ளிட்ட இருசக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : road ,Palani Murugan ,Varadara Road , Palani Murugan, Theertham, Varattara Road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி