×

மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் போலி ரசீது மூலம் அபராதம் வசூல்?

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் போலி ரசீது மூலம் அபராதம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், அபராத தொகையை மின்னணு முறையில் வசூலிக்க கோரிக்கை எழுந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் சாலைகளில் நடமாடும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வியாபாரிகள் சமூக விலகலை உறுதி செய்து, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும், இதனை பின்பற்றாத நபர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அரசு உத்தரவிட்டது.  இதையடுத்து ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் உள்ள 60 வார்டுகளில் அதிகாரிகள்  பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் முக கவசம் அணியாமல் செல்லும் ஒரு நபருக்கு ரூ.100ம், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவில்லை என்றால் ரூ.300 முதல் ரூ.600 வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. அபராதம் செலுத்தும் நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் ரசீது வழங்கப்படுகிறது.

அந்த அபாரத ரசீதுகளில் வசூலிப்பாளர் மற்றும் அவரது பதவி உள்ளிட்ட எவ்வித விவரங்களும் இல்லாமல் வழங்கப்படுகின்றன. இதனால், மாநகராட்சி அதிகாரிகள் போலி பில் புக் அச்சிட்டு அபராதம் வசூலித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறையில் அபராதம் வசூலித்தால் பல்வேறு முறைகேடுகள், கையாடல் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, பில் புக் மூலம் அபராதம் வசூலிப்பதற்கு பதிலாக காவல் துறை போல் மின்னணு முறையில் அபராதத்தை வசூலிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அபராதம் செலுத்திய வியாபாரிகளும், மக்களும் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது அதிகாரிகள் குழுக்கள் ஆய்வு செய்து முக கவசம் அணியவில்லை என்று அபராதம் வசூலிக்கின்றனர்.

ஏற்கனவே அபராதம் வசூலித்த கடைகளுக்கும் வந்து சமூக விலகல் இல்லை, பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கவில்லை என அபராதம் வசூலிக்கின்றனர். அபராதம் செலுத்தியபின் வழங்கப்படும் ரசீதில் அதிகாரியின் சீல், பதவி விவரம் போன்றவை எதுவும் இல்லை.  இது தொடர்பாக மாநகராட்சி  அதிகாரிகளிடம் கேட்டால், அவர்கள் முறையாக பதிலளிப்பதில்லை. ஆனால், மாநகராட்சி கமிஷனரோ, அல்லது மாவட்ட அதிகாரிகளோ ஆய்வு செய்ய வரும்போது மட்டும் அபராத வசூலிப்பு ரசீதில் பதவி, வசூலிப்பாளரின் பெயர், மாநகராட்சி சீல், அதிகாரி கையெழுத்து போன்றவை முறையாக குறிப்பிட்டு வழங்கினர்.

மற்ற நேரங்களில் ரசீதில் எவ்வித விவரமும் இல்லாமல் அபராதம் வசூலிக்கின்றனர். இந்த நடவடிக்கையினால் மாநகராட்சி அதிகாரிகள் போலியான ரசீது புக்கினை அச்சிட்டு அபாரதத்தை இதுவரை பல ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, அபாரத தொகையை பில் புக் மூலம் வசூலிப்பதற்கு பதிலாக மின்னணு முறையில் வசூலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Tags : face shields ,corporation area , Corporation, face shield, fake receipt
× RELATED ஆகஸ்ட் 5ம் தேதி முதல் ரேஷன் கடைகளில்...