×

டாஸ்மாக் கியூவில் இன்னும் எதுக்கு காத்திருக்கணும்...?தள்ளுவண்டியில் ‘சரக்கு’ சர்வீஸ்

* அங்கேயே வாங்கி... அப்படியே சாப்பிடலாம்
* திண்டுக்கல் ‘குடிமகன்’கள் குஷி; போலீஸ் குறட்டை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தள்ளுவண்டியில் மது விற்பனை படுஜோராக நடப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அமர்ந்து சாப்பிடும் பார் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் - நத்தம் சாலையில் குள்ளம்பட்டி மெயின் ரோட்டில் நான்கு சக்கர தள்ளுவண்டியில் எவ்வித ஒளிவுமறைவுமின்றி, பட்டப்பகலில் ‘குடிமகன்’களுக்கு படுஜோராக மது விற்பனை செய்யப்படுகிறது. கடைக்குச் சென்று கால் கடுக்கக் காத்திருந்து வாங்கி, அதை சாப்பிட ஒரு இடம் தேட அலுத்துக் கொள்ளும் ‘குடிமகன்’கள், கொஞ்சம் கூடுதல் விலையானாலும் பரவாயில்லை என்று நேராக இந்த தள்ளுவண்டி சரக்குக் கடைக்கு வந்து விடுகிறார்கள். கூடுதல் விலைக்கு இங்கு ‘சரக்கு’ வாங்கி, அந்த இடத்திலேயே நின்று அருந்திவிட்டுச் செல்கின்றனர்.

ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் சாலையில் திறந்தவெளியில் மது விற்பனை செய்வது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை போலீசார் கண்டுகொள்வதே இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘குடிமகன்’கள் அங்கேயே குடித்து விட்டு சாலையில் ஆட்டம் போடுவதும், விழுந்து கிடப்பதுமான சம்பவங்களும் தினமும் நடைபெறுகிறது. ‘‘போக்குவரத்து அதிகமுள்ள இந்த சாலையில் ‘குடிமகன்’கள் சாலையில் தள்ளாடிக் கொண்டு நடப்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பட்டப்பகலில், சாலையிலேயே தள்ளுவண்டியில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதை போலீசார் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது’’ என சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Tags : Tasmac , Tasmac, trolley, corona, curfew
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்