×

மேட்டூர் அணை உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி

மேட்டூர்: மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியில் செத்து மிதக்கும் மீன்களால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் இடதுகரையில் உபரிநீர் போக்கியான 16 கண் மதகு உள்ளது. அணையில் நீர்மட்டம் 120 அடியாகி தண்ணீர் நிரம்பினால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உபரிநீர் இந்த வழியாக வெளியேற்றப்படும். இந்த உபரிநீர் போக்கி பாதையில் ஆங்காங்கே குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தங்கமாபுரிப்பட்டணம் அருகேயுள்ள குட்டையில் தேங்கியிருக்கும் தண்ணீரில், நேற்று ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இங்கு அதிகளவில் ஜிலேபி வகை மீன்களும், அரஞ்சான், ஆரால், கெழுத்தி மீன்களும் செத்து மிதந்தன.

கடும் வெப்பம் காரணமாக, தண்ணீரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, குட்டையில் உள்ள மீன்கள் செத்து மிதந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இப்பகுதியில் 2 நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால், தங்கமாபுரிப்பட்டணம் பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதை தடுக்க பொதுப்பணித்துறையும், மீன்வளத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Mettur Dam Surface Water Disposal Mettur Dam , Mettur Dam, Surface Water, Fishes
× RELATED காரமடை அருகே 7 குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு