×

உரிய விலை கிடைக்காததால் நந்தியாவட்டம் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விடும் விவசாயிகள்

சேலம்: முகூர்த்தம், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் நந்தியாவட்டம் பூவின் ேதவை குறைந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் பூவை பறிக்காமல் செடியிலேயே விட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, மல்லூர், வீரபாண்டி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மாலை தொடுக்க தேவைப்படும் நந்தியாவட்டம் பூவை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு பறிக்கப்படும் பூவை விவசாயிகள் சேலம் வ.உ.சி., பூ மார்க்கெட் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் முகூர்த்தங்கள் பெரிய அளவில் நடைபெறவில்லை. அதேபோல் கோயில் திருவிழாக்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நந்தியாவட்டம் பூவின் தேவை குறைந்துள்ளது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பூவை பறிக்காமல் செடியிலேயே விட்டு வருகின்றனர். இது குறித்து பனமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ‘‘நந்தியாவட்டம் பூவை பொறுத்தமட்டில் பெண்கள் உபயோகப்படுத்துவதில்லை. மணமாலை தொடுக்க அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது முகூர்த்தம், கோயில் திருவிழாக்கள் இல்லாததால் நந்தியாவட்டம் பூவின் தேவை குறைந்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  ஒரு கிலோ பூ 300க்கு விற்றது. ஆனால் கடந்த சில நாட்களாக கிலோ 10க்கு கூட கேட்க ஆளில்லை. இதனால் நந்தியாவட்டம் செடியை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பூவை பறிக்காமல் செடியிலேயே விட்டு வருகின்றனர். உரிய விலை கிடைக்காததால் நந்தியாவட்டம் பூவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.


Tags : nandiyavattam plant , Nandiavattam Flowers, Farmers
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...