சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளையுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 96 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்த போதும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் 30ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது. இந்நிலையில், தமிழகத்தில் தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா என்பது குறித்து
சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்து வருகிறார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர்கள், மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனையை அதிகரிக்க வேண்டும். குழு ஆலோசனையை ஏற்று சோதனைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்து உள்ளது. பரிசோதனைகள் மூலம் முன்கூட்டியே நோய்களை கண்டறிய முடியும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல. ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவக் குழு பரிந்துரைக்கவில்லை. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
எந்த இடத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளதோ அங்கு மட்டும் நடமாட்டத்தை தடுத்தால் போதும். பொதுப் போக்குவரத்து, கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. ஏதாவது ஒரு கொரோனா அறிகுறி இருந்தால் மக்கள் காய்ச்சல் முகாமுக்கு செல்ல வேண்டும். ஏதாவது ஒரு அறிகுறி இருந்தாலும் கூட தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துள்ளனர்.
