×

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் பேச்சுவார்த்தையை மீறி படைகளை குவிக்கிறது சீனா: புதிய செயற்கைக்கோள் படத்தில் ஆதாரம்

லடாக்: கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் ஆற்று பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருதரப்புக்கும் இடையே அந்த இடத்தில் 2 வாரங்களுக்கு மேல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த 15ம் தேதி திடீரென மோதல் ஏற்பட்டது. இதில், இரும்பு தடி, ஆணிகள் பொருத்திய தடிகள், சுத்தியல் போன்றவற்றை பயன்படுத்தி சீன ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலில் இந்திய வீரர்கள் நடத்திய தாக்குதலில் 35 முதல் 40 சீன வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த எல்லை மோதலை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி, இருதரப்பும் ராணுவம் மற்றும் தூதரக ரீதியாக இதுவரை பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கின்றன. அதில், இருநாட்டு ராணுவமும் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சீனா அதில் இருந்து திடீரென பின்வாங்கியுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தனது ராணுவத்தை மீ்ண்டும் குவித்து வரும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளபுதிய செயற்கைக்கோள் புகைப்படத்தில், இந்த பள்ளத்தாக்கில் அசல் எல்லை கட்டுப்பாட்டு எல்லை கோடுக்கு அருகே சீன படைகள் குவிக்கப்பட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அங்கு பல்வேறு இடங்களில் மிகப்பெரிய அளவில் 20 ராணுவ கூடாரங்களை அது அமைத்துள்ள காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன. இந்த கூடாரங்கள் கருப்பு நிற தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது. இவற்றில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கல்வான் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளில் சீன தொடர்ந்து தனது ராணுவத்தை குவித்து வருகிறது. இந்த பள்ளத்தாக்கில் இருந்து சிறிது தூரத்தில், 10க்கும் மேற்பட்ட பிரமாண்ட ராணுவ டாங்கிகளையும் அது நிறுத்தியுள்ளது. ஏற்கனவே, இப்பகுதிகளில் சீன போர் விமானங்கள் அடிக்கடி பறந்து ரோந்து பணியில் ஈடுபடுகின்றன. அவை இந்திய எல்லைக்குள் அத்துமீறுவதை தடுப்பதற்காக, விமான எதிர்ப்பு ஏவுகணைகளை லடாக் எல்லையில் இந்திய ராணுவம் நிறுத்தி இருக்கிறது. சீனாவின் இந்த படைகள் குவிப்பு செயலால், எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் அதிகமாகி வருகிறது.

* உறவு முறிந்த காரணம் என்ன?
சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சிறந்த நண்பர்களாக இருக்கின்றனர். இருநாட்டு தலைவர்கள் என்ற அரசு நடைமுறைகளையும் மீறி, இருவரும் நணபர்கள், விருந்தினர்கள் என்ற முறையில் 2 முறை தனியாக சந்தித்து பேசி இருக்கின்றனர். முதல் சந்திப்பு சீனாவிலும், 2வது சந்திப்பு சமீபத்தில் தமிழ்நாட்டிலும் நடந்தது. அப்போது, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து பாசத்தை பொழிந்து கொண்டனர். இப்படிப்பட்ட நிலையில், போர் மூளும் அளவுக்கு இந்த இருநாடுகளுக்கும், இரு தலைவர்களுக்கும் இடையே திடீரென முரண்பாடு ஏற்பட்டது என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இது பற்றி நாட்டுக்கு மக்களுக்கு உண்மையை சொல்ல வேண்டும் என மோடியை காங்கிரசை சேர்ந்த பல தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

* பாகிஸ்தானில் சீன போர் விமானங்கள்
இந்தியா - சீனா இடையிலான மோதலை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. தனது கட்டுபாட்டில் இருக்கும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தனது விமானப்படை தளங்களை சீன போர் விமானங்கள் பயன்படுத்த அது அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள விமான தளங்களிலும், ஸ்கர்டு பகுதியில் உள்ள விமான தளத்திலும் சீன போர் விமானங்கள் தரையிறக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவை உளவுப் பார்க்க பாகிஸ்தான் வான் எல்லையையும் சீனா பயன்படுத்துகிறது.

* இந்திய ராணுவ வீரர்களை அடித்து கொல்ல பயிற்சி
இந்தியா- சீனா ஒப்பந்தப்படி, எல்லையில் 2 கிமீ தொலைவுக்கு இருநாட்டு ராணுவமும் எந்த ஆயுதமும் பயன்படுத்தக் கூடாது. ஊடுருவல், அத்துமீறல் நடந்தால் வீரர்கள் ஒருவரை ஒருவர் கைகளால் தடுத்து நிறுத்தி பின்வாங்கச் செய்வர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் நடப்பதற்கு முந்தைய நாட்களில், அப்பகுதிக்கு தனது நாட்டு தற்காப்பு கலை வீரர்களை சீன ராணுவம் அனுப்பி இருக்கிறது. இந்திய வீரர்களை அடித்து கொல்வதற்கான பயிற்சியை சீன வீரர்களுக்கு அவர்கள் அளித்துள்ளனர்.

* ஹாங்காங் பாதுகாப்பு சட்டம் மறுபரிசீலனை
ஹாங்காங்கின் தன்னாட்சி அதிகாரத்தை பறிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு மசோதா சீன நாடாளுமன்றத்தில் சமீபத்தில் சட்டமாக்கப்பட்டது. புதிய சட்டத்தில், பிரிவினைவாதிகள் மற்றும் தேசவிரோத செயல்களை தடுப்பதற்கான கூடுதல் சட்ட அதிகாரங்கள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. இதற்கு ஹாங்காங் மக்களும், பல்வேறு உலக நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதனால், இந்த சட்டத்தை சீனா மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது.

Tags : troops ,China ,Calvan Valley ,negotiations ,border ,gatherings , Calvan Valley, Border, Negotiation, China, New Satellite, Source
× RELATED நாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில்...