ஏசி ரயில் பெட்டிகளில் புத்தம் புது ஜில் காற்று: நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

புதுடெல்லி: ஏ.சி. ரயில் பெட்டிகளில் ஆபரேஷன் தியேட்டர்களில் இருப்பது போல், இயற்கையான தூய காற்றை செலுத்தும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக ரயில், பேருந்து, கப்பல், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், வந்தே பாரத் சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் புதிய காற்று செலுத்தப்படுவது குறித்து ரயில்வே அதிகாரி கூறியதாவது: கடந்த மே 12ம் தேதி முதல் இயக்கப்படும் ராஜ்தானி ரயில்களில் உள்ள 15 ஏ.சி. பெட்டிகளில் புதிய காற்று சுழற்சிமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன்படி, ஒரு மணி நேரத்துக்கு 16 முதல் 18 முறை இயற்கையான புதிய காற்று உட்செலுத்தப்படுகிறது. இதன் மூலம், 20 சதவீத புதிய காற்று உள்ளே செல்லும்.

தற்போதுள்ள ஏசி இயந்திரங்களில் வழக்கமாக 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே புதிய காற்று உள்வாங்கப்படும். ஏற்கனவே பயன்படுத்தும் காற்று குளிர்பதத்தில் இருப்பதால் அவை உடனடியாக குளிராகி விடும். ஆனால், புதிய காற்று உட்செலுத்தப்படும்போது அது குளிர் காற்றாக மாற அதிக சக்தி தேவைப்படுகிறது. இதனால், இதற்கு அதிக மின்நுகர்வு தேவைப்படும். மத்திய சுகாதாரத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு இந்த ஏசி பெட்டிகள் குளிரூட்டப்படுகின்றன. ஒரு மணி நேரத்துக்கு 12 முறை புதிய காற்று உட்செலுத்துவது போதுமானது என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பெட்டிகளில் கொரோனா தொற்று காரணமாக படுக்கை விரிப்பு, கம்பளம் வழங்கப்படுவதில்லை. எனவே, ஏசி.யின் அளவு 23 முதல் 25 டிகிரி வரை பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>