×

தெருவில் வாடும் தளிர்கள்: வாழ்வாதாரம் இழந்த 20 லட்சம் சிறுவர்கள்; சொற்ப கடனுக்காக கொத்தடிமை வாழ்க்கை

அவன் ஒரு 15 வயது சிறுவன். பீகாரை சேர்ந்தவன். இப்போது, டெல்லியில் இருக்கிறான். தெருக்களில் கிடைக்கும் காகிதம், அட்டைகளை சேகரித்து விற்பதே அவன் வேலை. தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை சம்பாதித்தான். கொரோனா, இவனுடைய தொழிலையும் பாதித்து விட்டது. மார்ச் முதல் இந்த அவலம். வயிற்றுக்கு உணவில்லை. வழக்கமாக தன்னிடம் பொருட்களை வாங்கும் கடை முதலாளிகளிடம் கை நீட்டினான்; கடன் வாங்கினான். ஊரடங்கு இன்று முடிந்து விடும், நாளை முடிந்து விடும் என நினைத்தான். ஆனால், 3 மாதங்கள் உருண்டோடி விட்டது. ஊரடங்கு முடிவதாக தெரியவில்லை. கடனை அடைக்க வழியில்லை. கடன்காரனாகி விட்ட அவன், இப்போது அதை அடைக்க கொத்தடிமையாக மாறும் சூழலில் இருக்கிறான்.
- இந்த பரிதாபத்தில் இவன் மட்டுமே இல்லை...

நாடு முழுவதும் இவனைப் போல் 20 லட்சம் தெருவோர சிறுவர்கள், சிறுமிகள் இருக்கிறார்கள். தெருக்கள்தான் இவர்களின் வாழ்வாதாரம். அங்கு கிடைக்கும் பழைய பொருட்கள்தான் இவர்களின் பொக்கிஷம். வாழ்க்கையின் விளம்பில் தத்தளிப்பவர்கள். ஏதோ ஒரு வகையில், இவர்கள் செய்த வேலைகள் கொரோனாவால் பறிபோய் விட்டன. பசியாற வழியில்லை. இவர்களின் சொற்ப வருமானத்தில் ஒருவேளையாவது சாப்பிட்ட குடும்பங்கள் தத்தளிக்கின்றன.
‘‘ஊரடங்கு எங்களை மிகவும் கஷ்டப்படுத்துகிறது. ஊரடங்கு தொடங்கிய ஆரம்பத்தில் சிலர் உணவு அளித்தனர். இப்போது, அவை நின்று விட்டன. நான் ரயில் நிலையம் ஓரம் ஒண்டி வாழ்கிறேன். ரயில்கள் ஓடினாலாவது ஏதாவது சம்பாதிக்கலாம்.

அதற்கும் வழியில்லை. கடன் கொடுத்தவர்கள் தொல்லை செய்கிறார்கள். எப்படி சமாளிப்பது என்றே தெரியவில்லை. தெரிந்த பொய்களை எல்லாம் சொல்லி விட்டேன்,’’ என்கிறான் அந்த சிறுவன். இந்த சிறுவர்களின் எதிர்காலம் என்ன? எப்படி இருக்கும்? ‘இந்த சிறுவர்கள் இனி, கடன் கொடுத்தவர்களிடம் கொத்தடிமை ஆவார்கள். எங்காவது ஒரு இடத்தில் தஞ்மடைந்து, அடிமை வாழ்க்கை நடத்துவார்கள். இதுதான் இவர்களின் தலையெழுத்தாக இருக்கும். செய்யும் வேலை வட்டிக்கு ஈடாகிவிடும். அசலை செலுத்த, வாழ்க்கை முழுவதும் கொத்தடிமையாக உழைக்க வேண்டியதுதான்,’ என்கிறார், இதுபோன்ற சிறுவர்களின் வாழ்க்கையில் அக்கரை செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி.

‘‘இதுபோன்ற சிறுவர்கள் வாங்கிய கடன் மிகவும் சொற்பமே. ரூ.5,000 முதல் ரூ.10,000 வரைதான் இருக்கும். ஆனால், வருமானம் இன்றி இவற்றை அடைப்பது என்பது மிகவும் கடினம். இவர்களை காப்பாற்ற முயற்சிக்கிறோம். ஊரடங்குக்குப் பிறகு இந்த சிறுவர்களில் நிறைய பேர் காணவில்லை. கால் போன போக்கில், வருமானத்தை தேடி போயிருப்பார்கள். ஒரு சிலரை மிகவும் மோசமான நிலையில் கண்டோம். தெருக்களில் கொடுக்கப்பட்ட இலவச உணவை வாங்க நின்ற சிறுவர்கள் பலர், கொரோனாவால் பாதித்தும் இருக்கிறார்கள்,’’ என்கிறார், ‘சிறுவர்களை காப்போம்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் நிர்வாகி சவுத்ரி. நாட்டில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த, 20 லட்சம் தெருவோர சிறுவர்களின் கதிதான் இனி என்ன?

1கடன் கொடுத்தவர்களால் சுரண்டப்படக் கூடும்.
2 கொத்தடிமைகளாக அவர்கள் மாறக்கூடும்.
3 பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படலாம்.
4 சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடும் அல்லது ஈடுபடுத்தப்படலாம்.
5 உடல் உறுப்புகளுக்காக கடத்தப்படலாம் அல்லது உடல் உறுப்புகளை விற்கக் கூடும்.

Tags : children ,Street , Street, shoots, livelihood, 20 lakh children
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்