×

சாத்தான்குளத்தை தொடர்ந்து தென்காசி அருகே கொடூரம்: போலீஸ் தாக்குதலில் ஆட்டோ டிரைவர் சாவு

* பொதுமக்கள் போராட்டம்
* எஸ்.ஐ, காவலர் மீது வழக்கு

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்த வீ.கே.புதூரைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவரது மனைவி விநாயகம். இவர்களது மகனும், ஆட்டோ டிரைவருமான குமரேசனுக்கும் (25), அதே ஊரைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்தது. இதுதொடர்பாக கடந்த மே 8ம் தேதி வீகேபுதூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்கு குமரேசன் தனது தந்தையுடன் ஆஜரானார். அப்போது விசாரித்த எஸ்ஐ சந்திரசேகர், குமரேசனை கன்னத்தில் தாக்கி விட்டு இருவரையும் மிரட்டி அனுப்பி வைத்தார்.

மறுநாள் ஆட்டோ ஸ்டாண்டிற்கு வந்த எஸ்ஐ சந்திரசேகர், அங்கு நின்றிருந்த குமரேசனிடம் மீண்டும் விசாரணை நடத்த காவல் நிலையத்திற்கு நாளை (10ம்தேதி) வருமாறு கூறியதோடு, குமரேசனின் செல்போனையும் பறித்துச் சென்றார். போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற குமரேசனை எஸ்ஐ சந்திரசேகரும், காவலர் குமாரும் லத்தியால் கொலைவெறித் தாக்கியுள்ளனர். காயமடைந்த குமரேசனுக்கு சுரண்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டும் உடல்நிலை தேறவில்லை. கடந்த 13ம் தேதி உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரேசன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

சாவுக்கு காரணமான வர்கள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் என்று வலியுறுத்தி உறவினர்களும், ஊர் மக்களும் காவல் நிலையம் அருகே விடிய,விடிய சாலை மறியலில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்றும் மறியல் நடந்தது.
அப்போது அவர்களை சமரசப்படுத்திய தென்காசி எஸ்பி சுகுணாசிங், ‘‘ எஸ்ஐ சந்திரசேகர், காவலர் குமார் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனிடையே நேற்று குமரேசனின் உடல் 3 மருத்துவர்கள் கொண்ட குழுவினரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஊர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Tenkasi ,Auto driver ,Terror ,Police attack , Sathankulam, Tenkasi, atrocity, police attack, auto driver death
× RELATED அனுமதியின்றி மீன் பிடித்தபோது தவறி...